"என்ன?, சச்சின் 3-வது நடுவரா??”.. ஒரு நிமிஷம் குழம்பிய ரசிகர்கள்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்து, குஜராத் அணி பெற்ற வெற்றி தான், தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
குஜராத் மற்றும் பஞ்சாப் அணி மோதிய போட்டி முடிந்து, அடுத்த போட்டிகள் நடைபெற்று வந்தாலும், ராகுல் டெவாட்டியாவின் சிக்ஸர்கள் பற்றி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இன்னும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, இருபது ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.
ராகுல் டெவாட்டியா 'அதகளம்'
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில், இளம் வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இருப்பினும், கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை பஞ்சாப் வீரர் ஓடேன் ஸ்மித் வீசினார். முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
பஞ்சாப் கை அதிகம் ஓங்கி இருந்த சமயத்தில், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விரட்டி, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ராகுல் டெவாட்டியா. அவரை குஜராத் ரசிகர்கள் கட்டித் தழுவி கொண்டாட, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது. இன்னொரு பக்கம், பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் தொடரில், தங்களின் இரண்டாவது தோல்வியை அடைந்துள்ளது.
மூன்றாம் நடுவராக சச்சின்?
இதனிடையே, இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தால், சச்சின் டெண்டுல்கர் பெயரில் ரசிகர்கள் குழம்பி, பின் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வந்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு மத்தியில் ஒரு ரன் அவுட்டிற்கு வேண்டி, மூன்றாம் நடுவரிடம் முடிவு மாற்றப்பட்டிருந்தது.
அப்படியே இருக்கு..
இதனை பரிசோதித்த மூன்றாம் நடுவர், "நான் நன்கு ஆராய்ந்து விட்டேன். எனது முடிவை அறிவிக்கவுள்ளேன்" என கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் தான் மூன்றாம் நடுவராக இருக்கிறாரா என குழம்பி போயினர். இதற்கு காரணம், மூன்றாம் நடுவராக இருந்த பஷ்சிம் பதாக்கின் சத்தம், அப்படியே சச்சினின் குரல் போலவே இருந்தது. இதனால், போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், சச்சினைக் குறிப்பிட்டு, குழப்பத்துடன் ட்விட்டரில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
சச்சின் மூன்றாம் நடுவராக தற்போது செயல்பட வாய்ப்பில்லை என்ற போதிலும், ஒரு நொடி அந்த சத்தத்தை கேட்டு ரசிகர்கள் குழம்பி போயிருந்தது குறிப்பிடத்தக்கது.