இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகின் பிதாமகன் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் எப்போதும் துடிப்புடன் இயங்கி வருபவர். இவரை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், சச்சின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவிவருகிறது.
வைரல் வீடியோ
சச்சின் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் தண்ணீர் பைப் அருகே நிற்கிறார். குழாயில் இருந்து நீர் கசிகிறது. அதனை முழுவதுமாக அடைத்துவிட்டு டிக்டாக் பிரபலமான காபி ஸ்டைலில் கையை நீட்டுகிறார். இந்த வீடியோவின் கேப்ஷனில்,"தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் குழாயை திறக்கவும். பிறகு அதனை சரியான முறையில் அடைக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஹெல்மட் அணிதல் உள்ளிட்ட சமூக பொறுப்பு குறித்த வீடியோக்களையும் சச்சின் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தண்ணீர் தினம்
உலகின் இன்றியமையாத வளங்களுள் ஒன்று தண்ணீராகும். அதன் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.1993 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.