'நீ தொடர்ந்து விளையாடனும்...' மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சச்சின் என்ன செய்தார் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகிரிக்கெட் விளையாடி வீடியோ மூலம் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில், அந்தச் சிறுவன் பெரும் தன்னம்பிக்கையோடு ஊர்ந்து ஓடி ரன் எடுப்பான். பலருக்கும் நெகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அந்த வீடியோ ஏற்படுத்தியது. அந்த வீடியோ குறித்து ட்வீட் செய்த சச்சின் டெண்டுகல்கர், ''மட்டா ராம் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விளையாடும் இந்த வீடியோவோடு ஒரு உத்வேகமான புத்தாண்டை துவங்குவோம். இந்த வீடியோ என் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுத்தது. உங்களுக்கும் இது பிடிக்கும்'' என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்தச் சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சச்சின். மட்டா ராமுக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றையும், தன் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் சச்சின் அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ''நீ ரசித்து விளையாடுவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உன் மீதான மற்றும் உன் நண்பர்கள் மீதான அன்பின் அடையாளமே இந்த அன்பளிப்பு. தொடர்ந்து விளையாடு'' என குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் அனுப்பிய கிரிக்கெட் பேட்டை தன் நெஞ்சோடு அணைத்தபடி மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் சிறுவன் மட்டா ராம். அன்பளிப்புக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ள சிறுவன், சச்சினை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket 🏏 with his friends.
It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020