'உங்களுக்கு 60 வயசு ஆச்சு...' 'இந்த வயசுல இப்படி ஆசை படுறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல தாத்தா...' 'இல்ல... இல்ல... ஒத்துகிட்டா தான் இறங்குவேன்...' - போஸ்ட் தூணில் ஏறி அடம்பிடித்த தாத்தா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் வசிக்கும் 60 வயது முதியவர் திருமணம் செய்து வைக்குமாறு மின்கம்பத்தில் ஏறி போராட்டம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் வசிக்கும் வரும் 60 வயதான சோபரான் சிங் என்னும் முதியவர், சுமார் 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயக்கூடிய மின்கம்பம் ஏறி தர்னாவில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தனக்கு திருமணம் செய்து வைத்தால் தான் கீழே வருவேன், தனக்கு வாழ பிடிக்கவில்லை என ஊர் மக்கள் முன்பு மிரட்டல் விடுத்து அடம்பிடித்துள்ளார்.
60 வயதான சோபரான் சிங்கின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் முதியவரை தங்களால் இயன்ற அளவு சமாதானப் படுத்தியுள்ளனர். குடும்பத்தினர் கெஞ்சியும் தனது முடிவில் இருந்து மாறாமல் விடாப்பிடியாக இருந்துள்ளார். 5 பேருக்கு தந்தையான அவருக்கு தற்போது பேரன், பேத்திகள் இருக்கின்றனர்.
பிள்ளைகளுக்கு தன்மேல் பாசம் இல்லாததால், தன்னுடைய கடைசி கால வாழ்க்கையை எண்ணிப் பார்த்த சோபரான் சிங், தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என எண்ணியுள்ளார். அதற்காக, குடும்பத்தினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார். பேரன், பேத்தி எடுத்த வயதில் மற்றொரு திருமணம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? என சோபரான் சிங்கின் கோரிக்கையை குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். என்ன செய்வதென்று யோசித்த சோபரான் சிங், வீட்டுக்கு அருகில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் வரை அதிலிருந்து இறங்குவதில்லை என முடிவெடுத்துள்ளார்.
மின்கம்பத்தில் ஏறிய சோபரான், தனக்கு திருமணம் செய்துவைக்கிறோம் என குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், குடும்பத்தினரும், ஊர்மக்களும் அவரை ஒரு வழியாக சமாளித்து மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவரின் போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் கொடுத்து, மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளனர். ஒருவழியாக முதியவரின் போராட்டம் முடிந்ததையொட்டி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மற்ற செய்திகள்
