திடீர் போராட்டம்... மேம்பாலத்தில் 20 நிமிடங்களாக நகர முடியாமல் சிக்கிக்கொண்ட பிரதமர் மோடி கான்வாய்
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி சென்று இருந்தார். பிரதமர் மோடியின் பாதையில் திடீரென மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது கான்வாய் சுமார் 20 நிமிடங்களுக்கு மேம்பாலத்திலேயே சிக்கிக் கொண்டது.
பிரதமர் மோடி சென்ற வழியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக அவரது பஞ்சாப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூர் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது. அந்த ஊருக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இடையூறுவின் காரணமாக அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
ஃபெரோஸ்பூர் பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடுவதாக திட்டம் இருந்தது. இதற்காக பிரதமர் மோடி இன்று காலை பதிண்டா வந்து இறங்கினார். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்துக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மோடி செல்வதாக இருந்தது.
ஆனால், மோசமான வானிலை நிலவியதால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருந்தார். அதன் பின்னரும் வானிலை சரியாகததால் பிரதமர் சாலை மார்க்கமாக பயணம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக சாலைப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. பிரதமர் சாலைப் பயணத்தின் போது ஒரு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்த சாலையில் திடீரென மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பிரதமர் மோடி தனது கான்வாயில் மேம்பாலத்திலேயே சுமார் 20 நிமிடங்களுக்கு சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு சரியானதாக இல்லை என பிரதமர் மோடியின் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் அரசு இந்த ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் பதிண்டா விமான நிலையம் சென்றார் பிரதமர் மோடி. இதுகுறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.