'குடிசை வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட எம்.பி.'... 'இணையமைச்சராக பதவியேற்ற சுவாரசியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 31, 2019 12:56 PM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவிப் பிரமாண விழாவில், எளிய மனிதர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் கோபிநாத்பூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் தான் ஒடிசாவின் மோடி என்று அறியப்படும் பிரதாப் சந்திர சாரங்கி. இளம் வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபாடு கொண்டு இயங்கிய சாரங்கி, சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் பரிச்சயமானவர் ஆவார். பட்டப்படிப்பை முடித்தபோதும் அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார்.
மிகவும் எளிய தோற்றத்தை கொண்டிருக்கும் அவர், கிராமங்கள்தோறும் சைக்கிளிலேயே வலம் வருகிறார். எளிதில் அணுகுவிடக்கூடியவர் என்று கூறும் ஒடிசா மக்கள், சாரங்கியை ஒடிசாவின் மோடி என்று அழைக்கின்றனர். 64 வயதாகியும் திருமணம் முடித்துக்கொள்ளாமல் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். பாலாசோர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளராக பெரும் கோடீஸ்வரர் ரபீந்திர குமார் ஜெனா, காங்கிரஸ் வேட்பாளராக நவஜோதி பட்நாயக் என பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க வேட்பாளர்கள் எதிர் திசையில் களமிறங்கினர். ஆனால், சாரங்கி தனது பாணியில் சைக்கிளிலேயே கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அப்போது அதிகளவில் பகிரப்பட்டன.
சாரங்கிக்காக பிரதமர் மோடியே பாலாசோர் தொகுதியில் பரப்புரை செய்தார். முதல் முறையாக எம்.பி.யாகியுள்ள பிரதாப் சந்திர சாரங்கி பதவியேற்பதற்காக தனது குடிசை வீட்டிலிருந்து சைக்கிளிலேயே புறப்பட்டார். 2-வது முயற்சியில் எம்.பி. ஆகியிருந்தாலும் எம்.பி.யான முதன்முறையிலேயே மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகியுள்ளார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது எளிய தோற்றத்தின் அடையாளமான சாரங்கியும் இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சாரங்கி சைக்கிளில் சென்று பரப்புரை செய்த படங்கள், பதவியேற்க சைக்கிளில் புறப்பட்ட புகைப்படங்களை போல அவர் பதவியேற்றுக்கொண்ட காணொலி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.