'நாங்களும் இந்தியா'ல உள்ளவங்க தான்' ... 'எங்களையும் மனுஷங்களா பாருங்க' ... தொடர்ந்து தவித்து வரும் வடகிழக்கு மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 30, 2020 04:43 PM

கர்நாடக மாநிலத்தில் உணவு பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்ற நாகலாந்து இளைஞர்கள் இரண்டு பேருக்கு உள்ளே நுழைய கடை நிர்வாகம் மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

North east people once again insulted in India

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொது இடங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் மளிகை பொருட்கள் வாங்க சூப்பர் மார்கெட்டிற்கு நாகலாந்து இளைஞர்கள் இரண்டு பேர் சென்றுள்ளனர். இவர்கள் பார்ப்பதற்கு சீன நாட்டிலுள்ளவர்களைப் போல இருப்பதால் அவர்களை கடைக்குள் அனுமதிக்க கடை நிர்வாகம் மறுத்துள்ளது. இதனை ஒரு வீடியோவாக அந்த இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த இளைஞர்கள் அந்த வீடியோவுடன் தனது சமூக வலைத்தளத்தில் கூறுகையில், 'நானும் என் நண்பரும் மளிகை பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த பாதுகாவலர், வேறு நாட்டை சேர்ந்தவர்களை கடைக்குள் அனுமதிக்கமாட்டோம் எனக் கூறி மறுத்தார். நாங்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் தான் எனக் கூறி எங்கள் ஆதார் கார்டைட் காட்டிய போதும் அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கடைசியில் உணவு பொருட்களை வாங்க முடியாமல் வீட்டிற்கு திரும்பினோம். உலகமே கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் உணவில்லாமல் உறங்க முடியாது. எங்களுக்கும் அதே நிலை தான். அதனால் இன வெறியை நிறுத்துங்கள்' என பதிவிட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் பார்ப்பதற்கு சீன மக்கள் போல இருப்பதால் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதை வைத்து பலர் இவர்களை கிண்டல் செய்தும், தீங்கிழைத்தும் வருகின்றனர். டெல்லியில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, கொரோனா வைரஸ் என்று அழைத்த நபர் ஒருவர் அவர் மீது எச்சிலை துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #MYSORE #RACISM