திருமணமான பெண்ணுக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்தால் என்ன ஆகும்? பரபரப்பான வழக்கில்... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

மஹராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் ஸ்ரீகிருஷ்ணா தவாரி என்னும் நபர், அதே பகுதியை சேர்ந்த, திருமணமான 45 வயது பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு வந்தது. அப்போது திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா தவாரிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தீர்பினை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணா தவாரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அப்பெண்ணின் மீது ஒரு புகாரை அளித்துள்ளார்.
அந்த மனுவில், சம்மந்தப்பட்ட பெண் மளிகை சாமான் பாக்கி தரவேண்டும் எனவும், அதனை கேட்டதற்கு இம்மாதிரியான பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீகிருஷ்ணா தவாரி அளித்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது அதில், 'முதலில் திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் அளிப்பது அவரது கண்ணியத்தை இழிவுப்படுத்துவதற்கு சமமானது.
மனுதாரர் மளிகை பாக்கி பற்றி பேசுகிறார். ஆனால் அவர் கடிதம் கொடுத்த அடுத்த நாளில் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் ஆபாசமாக பேசி, கடிதம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது அந்த பெண்ணிடம் வாயை சுளித்து கண்ணால் சிக்னல் காட்டியுள்ளார்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு முன்பு விதிக்கப்பட்ட ரூ.40,000 அபராதம் தற்போது 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இதில் 85 ஆயிரம் ரூபாயை மனுதாரரால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க வேண்டும். மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார்' என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
