‘பாவம்ங்க மாப்பிள்ளை’.. தாலி கட்டுற நேரத்துல கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. போலீஸ் விசாரணையில் சொன்ன பரபரப்பு பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
மண்டபத்தில் உறவினர்கள் சூழ வெகுவிமர்சையாக திருமணம் விழா நடைபெற்றது. அப்போது மணமேடைக்கு மணப்பெண் வந்ததும், மணமகன் மாலை போட சென்றார். ஆனால் மணமகனை தடுத்த மணப்பெண், அங்கிருந்து இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள் எவ்வளவோ தடுத்தும் மணப்பெண் அறைக்கு சென்று உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டார். இதனால் குடும்பத்தினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
உறவினர்கள் எவ்வளவோ தட்டியும் அப்பெண் கதவை திறக்கவில்லை. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தான் மற்றொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதனம் செய்தனர். ஆனால் அப்போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இதனை அடுத்து பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதை அடுத்து அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, திருமணம் பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறிவிட வேண்டும், சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து அசிங்கப்படுத்தக் கூடாது என மணப்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.