'சவுதியிலிருந்து போன் செய்த கணவன்'... 'ஹலோ சொல்வதற்குள் சொன்ன அந்த வார்த்தை'... உடைந்து நொறுங்கிப்போன மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாசவுதியிலிருந்து கணவனிடம் வந்த அழைப்பை எடுத்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
உத்திர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், ஹத்காம் பகுதியில் வசித்து வருபவர் ரசியா பானு. இவருடைய கணவர் தசபுல் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் குடும்பத்தினர் ரசியா பானுவின் பெற்றோரிடம் அதிகப்படியான வரதட்சணை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
ஆனால் ரசியா பானுவின் பெற்றோரால் அவர்களால் கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தசபுல் அவரது மனைவியை சவூதி அரேபியாவிலிருந்து அழைத்துள்ளார். அப்போது போனை எடுத்த ரசியாவிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனிடையே இஸ்லாமிய ஆண்கள் மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரசியா பானு காவல்நிலையத்தை நாடி புகார் அளித்துள்ளார். முன்னதாக ரசியா பானுவை கடந்த 2005-ல் தசபுல் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு ரசியா பானுவை தசபுல் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தசபுல் மற்றும் அவரது குடும்பத்தினர் 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.