"'கேனான்', 'நிக்கான்'னு பசங்களுக்கு கேமரா பேரு வெச்சேன்"... இப்போ என்னோட பல வருஷ கனவையும் கட்டி முடிச்சுட்டேன்... லைக்குகளை அள்ளிக் குவிக்கும் "கேமரா இல்லம்"!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் ஒருவர் கேமரா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளது பலரது பாராட்டை பெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்லகவி எனும் பகுதியை சேர்ந்தவர் ரவி கோங்கல். 49 வயதான இவர், ப்ரோபஷ்னல் புகைப்படக் கலைஞராக உள்ள நிலையில், கேமரா மீது கொண்ட அதீத அன்பு காரணமாக தனது மூன்று மகன்களுக்கு கேனான், நிக்கான், எப்சான் என கேமரா பெயர்களை வைத்துள்ளார். தொடர்ந்து, தற்போது கேமரா வடிவிலான வீடு ஒன்றையும் சுமார் 71 லட்ச ரூபாய் வடிவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டிற்கு 'க்ளிக்' இல்லம் என பெயரிடப்பட்டுள்ளது
ரவிக்கு தனது கனவு வீட்டினை கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. 'சிறுவயதில் நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்ததும் சிறந்த புகைப்பட கலைஞர் ஆக வேண்டுமென்று முடிவு செய்து விட்டேன். சொந்தமாக கேமரா ஒன்றை வாங்கிய நான், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளை படம்பிடிக்க செல்வேன். அதில் கிடைத்த வருமானம் மூலம் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்தேன்' என்றார்.
தொடர்ந்து, க்ரிபா ராணி என்பவரை ரவி திருமணம் செய்த நிலையில், சித்தார்த் என இருந்த ஸ்டூடியோ பெயரை 'ராணி' என மாற்றிக் கொண்டார். தனது போட்டோகிராஃபி மீதான தனது ஆர்வத்திற்கு மனைவி மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் ரவி தெரிவித்தார். 'எனது மூத்த மகனுக்கு கேமரா பெயரை வைக்கப் போவதாக குடும்பத்தாரிடம் தெரிவித்த நிலையில், அனைவரும் முதலில் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், எனது மனைவி தான் எனக்கு ஆதரவாக இருந்து குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். தொடர்ந்து அடுத்த இரண்டு குழந்தைகளுக்கும் கேமரா பெயரையே சூட்டினோம். எங்கள் பிள்ளைகளுக்கும் அந்த பெயர் மிகவும் பிடித்து போய் விட்டது' என தெரிவித்தார்.
முன்னதாக, கேமரா வடிவில் தனது கனவு வீடு ஒன்றை தான் கட்ட விருப்பம் உள்ளதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அது குறித்த பாதையை உருவாக்கி பணியை தொடங்கியுள்ளார். மிகவும் உன்னிப்பாக, வீட்டிற்குள் ஜன்னல் கம்பிகள், டிசைன்கள், கதவு என அனைத்திலும் கேமரா லென்ஸ், பிலிம் ரோல் என கேமரா சம்மந்தப்பட்ட பாகங்களை கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாடியுள்ள இந்த வீட்டில், ஒவ்வொரு தளமும் தனது மகன்களின் கேமரா பெயரைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.
ரவியின் இரண்டாவது மகனும் போட்டோகிராஃபி கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ரவியின் கனவு இல்லம் அப்பகுதியில் உள்ளவர்களை தாண்டி இணையத்தளங்களில் வைரலான நிலையில், பலர் ரவியின் அசாத்திய கனவு இல்லத்தை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
