'அப்பா, அப்பா அலறிய மகள்'... 'பெட் ரூமுக்கு ஓடி வந்த மனைவி'... 'இதுக்கு தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்தீங்களா'?... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு ஜெயநகரில் வசித்து வருபவர் விஜய்சங்கர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், கர்நாடக அரசின் சகாலா திட்டத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல அலுவலகத்திற்குச் சென்ற அவர், மதியத்திற்குப் பின்பு விதானசவுதாவில் இருந்து ஜெயநகரில் உள்ள தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வீட்டிற்கு வந்ததும் படுக்கையறைக்குச் சென்ற அவர் வெகுநேரம் ஆகியும் கதவைத் திறக்காமல் அறையிலேயே இருந்துள்ளார்.
அப்பா, அறைக்குள் சென்று நிறைய நேரம் ஆச்சே, இன்னும் ஏன் வெளியில் வரவில்லை என அவரது மகள் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய்சங்கர் தனது அறையில் சடலமாகத் தொங்கிக் கொண்டு இருந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவி, கணவரின் கோலத்தைப் பார்த்துக் கதறி அழுதார். சம்பவம் குறித்து உடனடியாக திலக்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு திலக்நகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசாரின் விசாரணையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர், ஸ்ரீநாத் ஜோஷி ''ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. விஜய்சங்கர் தற்கொலை செய்யும் போது, அவரது மனைவி, மகள்ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். விஜய்சங்கர் வீட்டிலிருந்து, அவர் எழுதியதாகக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான கரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என அவர் தெரிவித்தார். இதனிடையே கடந்த ஆண்டு விஜய்சங்கர் பெங்களூரு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருந்தார்.
அப்போது மன்சூர்கான் என்பவர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நகைக்கடைகள் நடத்தி முறைகேடுகள் செய்திருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரு ஆட்சியராக இருந்த விஜய்சங்கருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடைகளில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி விஜய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்திருந்தனர்.
அறிக்கை அளித்த சில மாதங்களில் மன்சூர்கான் நடத்திய நகைக்கடைகளில் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.2,500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த நேரம் பார்த்து மன்சூர்கான் நகைக்கடைகளில் முறைகேடு நடக்கவில்லை என்று கூறி அரசிடம் அறிக்கை அளிக்க விஜய்சங்கர் ரூ.1½ கோடி லஞ்சம் வாங்கியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, விஜய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அதே நேரத்தில் விஜய்சங்கரை கர்நாடக அரசுப் பணி இடைநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் சிறையிலிருந்த விஜய்சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் விஜய்சங்கரை காலா திட்டத்தில் இயக்குநராகக் கர்நாடக அரசு நியமித்திருந்தது. அவர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விஜய்சங்கர் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் அவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் விஜய்சங்கர் தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியாத நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெங்களூருவில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.