இந்திய ராணுவத்தில் இருந்து விடைபெறும் அபிநந்தனின் மிக் -21 ரக விமான படைப்பிரிவு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட மிக்-21 ஸ்குவாட்ரன் படைப்பிரிவு விமானங்கள் இந்த மாத இறுதியில் இருந்து விடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்திருக்கிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு அனைத்து மிக்-21 ரக விமானங்கள் விடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலின்போது இந்திய ராணுவத்தை சேர்ந்த விங் கமாண்டர் (தற்போது க்ரூப் கேப்டன்) அபிநந்தன் பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போது அவர் பயணித்த மிக்-21 ரக விமானமும் சுடப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் கிராமம் ஒன்றில் பாராசூட் உதவியுடன் தப்பிய அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அபிநந்தனை விடுவிப்பது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக மார்ச் 1 ஆம் தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அளித்து மத்திய அரசு கவுரவப்படுத்தியது.
மிக் - 21
அபிநந்தன் பணிபுரிந்த ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட மிக்-21 ஸ்குவாட்ரன் படைப்பிரிவு விமானங்கள், இந்திய விமானப் படையின் சேவையிலிருந்து இம்மாத இறுதியில் விடைபெற உள்ளன. அதன்பிறகு 3 படைகளில் மட்டுமே இந்த ரக விமானங்கள் இருக்கும். அவையும் வரும் 2025 ஆம் ஆண்டில் சேவையில் இருந்து விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் முதல் மிக் - 21 ரக விமானம் 1963 ஆம் ஆண்டு இணைந்தது. அதுதொடர்ந்து பல மிக் - 21 ரக விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்திவந்தது. இருப்பினும் இந்த ரக விமானங்கள் அதிக அளவில் விபத்திற்கு உள்ளாவதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.