'உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு'... 'இந்தியா பிடித்துள்ள இடம்'... வெளியான முழு விவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கை ஒன்றில், உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான 'கேலப்' 149 நாடுகளில் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது குறித்த தரவுகளை அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து சேகரித்தது.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கிய வரையறையாக, தனிமனித சுதந்திரம், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, குறைவான ஊழல், அரசிடம் இருந்து கிடைக்கும் சமூக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் ஒன்பது நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஆகும். ஐரோப்பியக் கண்டத்தில் இல்லாமல் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள ஒரே ஒரு நாடாக நியூசிலாந்து உள்ளது.
இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து சென்ற ஆண்டு 8ஆம் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு 13வது இடத்திலிருந்த பிரிட்டன் இந்த ஆண்டு 17வது இடத்திற்குச் சரிந்துள்ளது. அமெரிக்கா 19-வது இடத்தில் உள்ள இந்த பட்டியலில் இலங்கை 129-ஆவது இடத்திலும், மலேசியா இந்தப் பட்டியலில் 81-ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரைத் தரவுகளின் அடிப்படையில் இந்தியா 139-ஆவது இடத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தான் உடன் லெசோத்தோ, போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் மகிழ்ச்சி குறைவான நாடுகளாக இந்தப் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு 94வது இடத்திலிருந்த சீனா இந்த ஆண்டு 84-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கிடையே ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது, அந்த நாட்டு மக்கள் ஒருவர் மீது ஒருவருக்குப் பரஸ்பர நம்பிக்கை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அது கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காக்க உதவியதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய நாடு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பிற ஐரோப்பிய நாடுகளை விட மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.