'கேரளா, தமிழ்நாட்டுகாரங்க தான் அதிகம்'... '8 லட்சம் பேரின் எதிர்காலம் என்ன ஆகப்போகுது'?... அச்சத்தை கிளப்பியுள்ள மசோதா!
முகப்பு > செய்திகள் > இந்தியாகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பிரச்சனை எனப் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், குவைத் அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மசோதா இந்தியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வளைகுடா நாடான குவைத்தில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கும் நிலையில் அதில் 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதில் கணிசமான அளவில் கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாகத் தென் தமிழகத்தை சேர்ந்த பலர் குவைத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் உலகை ஆட்டம் காணச் செய்துள்ள கொரோனா பிரச்சனை மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் நிறுவனங்களும் பெரும் சிக்கலில் இருக்கின்றன. அதே நேரத்தில் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் வெளிநாட்டினருக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதனால், வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் குவைத் நாட்டுப் பிரதமர், ஷேக் ஷபாப் அல் காலித் அல் ஷபாப் ''எங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள் தொகையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ''குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது வெளிநாட்டினர் மக்கள் தொகையைக் குறைக்கும் வகையில் சரத்துகள் இடம்பெற்றுள்ளது. இதன்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யும். இந்த மசோதா இனிமேல் உயர்மட்டக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இந்த மசோதாவின் படி பார்த்தால் குவைத்தில் உள்ள 12 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் இந்தியா திரும்ப வேண்டியிருக்கும். ஏற்கனவே கொரோனா காரணமாகப் பலர் வேலையிழந்துள்ள நிலையில், இந்த மசோதா அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
