'யானை கிட்ட இருந்த மனுசங்க கண்டிப்பா இத கத்துக்கணும் பா'... 'கூட்டத்திலிருந்த பெண் யானைகள் செய்த செயல்'... வாயடைத்து போன வனத்துறையினர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனிதனுக்கு வன உயிரினங்கள் பல நேரங்களில் பல பாடங்களைச் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றன. அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் மூன்று பேரைக் கொன்ற சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கக் கடந்த நான்கு நாட்களாக வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் போய் முடிந்தது. இந்நிலையில் 5-ஆவது நாளான நேற்று புஞ்சக் கொல்லி பகுதியில் அந்த யானை, கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அலெர்ட்டான வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலமாக அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து 45 நிமிடத்தில் மீண்டும் மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முயற்சி செய்தார்கள். அப்போது கூட்டத்திலிருந்த 2 பெண் யானைகள் சங்கர் யானையின் அருகில் கூட வனத்துறையினரை நெருங்க விடவில்லை. சங்கர் யானைக்கு மயக்கம் தெளியும் வரை பெண் யானைகள் சங்கருக்குப் பாதுகாப்பு அரண் போல நின்றன.
இவற்றை எல்லாம் பார்த்த வனத்துறையினர் யானைகளின் ஒற்றுமையைப் பார்த்து அசந்து போனார்கள். பின்னர் சங்கர் யானைக்கு மயக்கம் தெளிந்த பின்பு அதனை அழைத்துக்கொண்டு அனைத்து யானைகளும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. மயக்க ஊசி செலுத்தியும் யானையைப் பிடிக்க முடியாததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். ஆயிரம் காரணங்களால் மனிதன் தங்களுக்குள் பிரிந்து கிடக்கிறான். ஆனால் மனிதர்களை விட நாங்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்று விட்டது அந்த யானைக் கூட்டம்.