வெளிநாட்டுக்கு படிக்க, வேலைக்கு போறீங்களா..? அப்போ இந்த ‘சான்றிதழ்’ முக்கியம்.. மத்திய அரசு ‘புதிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்களுக்கென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்காக தடுப்பூசி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடு செல்ல வசதியாக கொரோனா தடுப்பூசி முதல் டோஸுக்கும், இரண்டாவது டோஸுக்கும் இடைப்பட்ட காலம் 4 வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது சாதாரண நபர்களுக்கு 12-16 வாரமாக உள்ள நிலையில், வெளிநாடு செல்பவர்களின் பயணம் தடைபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இந்த வசதி பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், விளையாட்டு வீரர்கள், அவர்களுடன் செல்லும் ஊழியர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களிடம் முறையான ஆவணங்களை கொடுத்து, தங்களின் வெளிநாட்டு பயணத்திற்கான காரணத்தை உறுதி செய்து இந்த சலுகையை பெற முடியும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு செல்பவர்கள் தங்களது பாஸ்போர்ட்டுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை (CoWIN certificate) இணைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.