5 ஆண்டுகளுக்கு 'சம்பளம்' இல்லா விடுமுறை?... அதிர்ச்சியில் 'ஆழ்ந்த' ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்த சம்பளம் இல்லாத விடுமுறை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே கடனில் தத்தளித்து வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. இதனால் ஊழியர்களை சம்பளம் இல்லாத லீவில் 6 மாதம் முதல் 2 வருடம் வரை அனுப்பி வைக்க அந்நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பளம் இல்லாத விடுமுறை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தோடு சம்பளம் இல்லாமல் விடுமுறை திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் விமானச் சேவையில் இருக்கும் பிற நிறுவனங்களில் ஏர் இந்தியா ஒப்புதல் இல்லாமல் பணிக்குச் சேர முடியாது என்றும், வேறு நிறுவனத்தின் பணியில் சேர்வதற்கு முன்பு கண்டிப்பாக ஏர் இந்தியா நிர்வாகம் ஒப்புதலுக்குப் பின்பு தான் வேறு நிறுவன பணியில் சேர முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை நிறுவனத்தை விட்டு வெளியேற நினைத்தாலும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் வெளியேற முடியும் என்பதால், ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். செலவினங்களை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சம்பளம் இல்லாமல் அனுப்பப்படும் ஊழியர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு விடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.