இளைஞருக்கு கெடச்ச அரசு வேலை.. "ஊரே சேர்ந்து திருவிழா மாதிரி கொண்டாடி இருக்கு".. சல்யூட் போட வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளைஞர் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்த நிலையில், அதனை ஒட்டுமொத்த கிராமமே கொண்டாடிய சம்பவமும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோஹாக்பூர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ராகேஷ் குமார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது.
முன்னதாக, ராகேஷின் 19-வது வயதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் தன்னுடைய கல்வியின் நிதி நெருக்கடியை சமாளிக்க, அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து வந்துள்ளார் ராகேஷ்.
தனக்கு உதவி செய்ய ஆசை யாரும் இல்லாததால் சொந்த காலிலேயே மிகவும் கடினமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறவும் அவர் முடிவு எடுத்துள்ளார். மேலும், அரசு வேலைக்கு சேர வேண்டும் என்பது தான் ராகேஷின் லட்சியமாகவும் இருந்துள்ளது. இதற்காக தீவிரமாக தயாராகி வந்த ராகேஷுக்கு, முசாபர்பூரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக அரசு வேலை கிடைத்துள்ளது.
ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை ஒட்டுமொத்த சோஹாக்பூர் கிராமமும் மிக விமரிசையாக கொண்டாடி உள்ளது. இதற்கு காரணம், அந்த கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கூட கடந்த 75 ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்கவில்லை என்பது தான். அப்படி இருக்கையில், தற்போது அந்த கிராமத்திலிருந்து இளைஞர் ஒருவர் முதல் முறையாக அரசு வேலை பெற்றுள்ளது ஒட்டுமொத்த கிராமத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றி பேசும் இளைஞர் ராகேஷ், "கடந்த 75 ஆண்டுகளாக எனது கிராமத்தில் இருந்து ஒருவர் கூட அரசு வேலையில் சேரவில்லை. அப்படி இருக்கையில் அதனை உடைத்து எனது கிராமத்தின் இமேஜை மாற்ற வேண்டும் என்றும் நான் முடிவெடுத்தேன். கடைசியில் அதனை நான் தற்போது நிறைவேற்றி உள்ளேன்" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தொடங்கி உள்ளனர். 2000 பேர் வரும் வசித்து வருகின்ற கிராமத்தில் அரசு வேலைகள் கிடைப்பது என்பது வரம்பு மீறியது என இருந்து வந்த விஷயத்தை இளைஞர் உடைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் இனிப்புகளை வழங்கினர்.
இளைஞருக்கு அரசு வேலை கிடைத்தது தொடர்பாக அந்த கிராமத்து மக்கள் பேசுகையில், சுதந்திரத்திற்கு பிறகு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், இனி வரும் புதிய தலைமுறை அரசு வேலைக்கு செல்லவும், கிராமத்தின் மீதான விதியை மாற்றவும் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
75 ஆண்டில் முதல் முறையாக ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது, தற்போது நாட்டில் உள்ள பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.