சென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் தான் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. குறிப்பாக மெட்ரோ நகரங்களான சென்னை, மும்பை, டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆனால் பெங்களூரின் நிலை தற்போது மேற்கண்ட 3 மெட்ரோ நகரங்களை விடவும் மோசமாகி வருகிறது.
கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்த பெங்களூர் நகரம் அதிவேகமாக கொரோனா கோரப்பிடியில் சிக்க ஆரம்பித்துள்ளது. உச்சகட்டமாக கடந்த ஞாயிறன்று 1235 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களாகவே அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 900 என்றளவில் இருக்கிறது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை 15.7% அதிகரித்துள்ளது.
இது மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது. மூன்று நாள்களில் டெல்லியில் 2.6% பாசிட்டிவ் கேஸ்களும், சென்னையில் 2.9% மற்றும் மும்பையில் 1% கேஸ்களும் பதிவாகியுள்ளன. அதே போன்று பெங்களூரில் வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக உள்ளது. அதே நேரம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 14.7% என்றளவிலேயே இருக்கிறது. இந்த சராசரி டெல்லியில் 71.7% ஆகவும் சென்னையில் 62% மற்றும் மும்பையில் 66.1% ஆகவும் உள்ளது.
இதனால் அச்சத்தில் ஆழ்ந்த மக்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊர்களை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றனர். இதையடுத்து கர்நாடக உள்துறை அமைச்சர், '' மக்கள் யாரும் பெங்களூரை விட்டு வெளியேற வேண்டாம். தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்,'' என கேட்டுக்கொண்டு உள்ளார்.