'என் கண்ணு முன்னாடியே நீங்க கஷ்டப்படுறத பார்க்க முடியல மா!'.. பாசத்தந்தை எடுத்த விபரீத முடிவால்... வேரோடு அழிந்த குடும்பம்!.. 'வேண்டாம் ப்ளீஸ்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவலறிந்த 2 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. இவருக்கு ஸ்வேதா, சாயி என 2 மகள்கள் இருந்தனர். ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 2வது மகளான சாயி அருகே உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்வேதாவின் திருமண வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தினமும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தனது மகள் அனுபவிக்கும் கொடுமைகளை மனரீதியாக தாங்க இயலாத பாபு ரெட்டி தன்னுடைய மரணத்திற்கு மருமகன் சுரேஷ்குமார் ரெட்டிதான் காரணம் என்று செல்பி வீடியோ பதிவு செய்துவிட்டு வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாபு ரெட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே, தனது தந்தையின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத ஸ்வேதா, சாயி ஆகிய இருவரும் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் நடைபெற்ற மூன்று பேர் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் சுரேஷ்குமார் ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.