நடுராத்திரில நாய் ஏன் இப்படி கத்துது?... சந்தேகத்துல வெளியே வந்த ஹவுஸ் ஓனருக்கு காத்திருந்த ஷாக்.. கொஞ்ச நேரத்துல ஹீரோவாக மாறிய நாய்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலத்தில் ஏடிஎம் மெஷினை கொள்ளையடிக்க வந்த நபர்களை ஓட விட்டிருக்கிறது நாய் ஒன்று. இதனால் 27 லட்ச ரூபாய் களவுபோகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிப்பாக் பகுதியில் அமைந்துள்ளது சைதி கிராமம். இந்த கிராமத்தின் ஜிடி சாலையில் வசித்துவரும் சுதிர் பர்ன்வால் என்பவர் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு சம்பா என பெயர்சூட்டியுள்ளார் சுதிர். இவரது வீடு அமைந்திருக்கும் கட்டிடத்தில் கீழ் தளத்தில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த ஏடிஎம்-ல் அதிகாரிகள் பணம் நிரப்பியதாக தெரிகிறது.
சத்தம்
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல, தனது செல்ல நாயான சம்பாவுக்கு உணவளித்து விட்டு சுதிர் தூங்கச் சென்றிருக்கிறார். நள்ளிரவில் சம்பா குரைக்க துவங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட சுதிர், விடாமல் நாய் குரைக்கவே சந்தேகமடைந்திருக்கிறார். இதனையடுத்து வெளியே சென்று பார்வையிட முடிவெடுத்திருக்கிறார்.
விளக்குகளை ஒளிர விட்டு வெளியே வந்த சுதிர், தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்த சம்பாவை தடவிக்கொடுத்திருக்கிறார். ஆனால், சம்பாவோ கீழ் தளத்தை பார்த்தபடி குரைத்திருக்கிறது. இதனை அடுத்து கீழே இறங்கிச் சென்ற சுதிர், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
விசாரணை
வீட்டின் கீழ் தளத்தில் இருந்த ஏடிஎம்-ல் மிஷின் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து திகைத்த சுதிர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் காவல்துறைக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.
விசாரணையில், கேஸ் கட்டர், சிலிண்டர் ஆகியவற்றை கொண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரந்தை உடைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அக்கம் பக்கத்தினர் நாய் குரைத்ததால் எழுந்ததன் காரணமாக, அந்த கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே போட்டுவிட்டு சென்றிருக்கிறது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இயந்திரத்திற்குள் 27 லட்சம் பணம் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கிராமம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, சம்பாவை அந்த பகுதி மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
