'ஊர்ல அமெரிக்கா ரிட்டர்ன்னு எவ்வளவு பெருமையா இருக்கும்'... 'ஆனா இப்படி ஒரு நிலைமையா'?... அதிரவைக்கும் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் குறித்து தற்போது வெளிவந்துள்ள அறிக்கை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் இந்தியர்கள் கால் பாதிக்காத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பெரும்பான்மையான நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் 42 லட்சத்திற்கு. மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்கள் நிலை குறித்தும், அவர்களின் பொருளாதார சூழல் குறித்தும் ’பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடிஸ்’ என்ற அமைப்பு 'இந்தியர்களின் வறுமை' என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான் தற்போது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அந்த ஆய்வின் படி அமெரிக்க வாழ் இந்தியர்களில் 6.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி, மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள்தான் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா காரணமாகப் பலர் வேலையிழந்த நிலையில், அங்கு மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணியில் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த அதிர்ச்சியான அறிக்கையின் மூலம் ''மிகவும் பின் தங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நாங்கள் கவனத்தைச் செலுத்துவோம்'' என்று கூறியிருக்கிறார், இந்தியாஸ்போராவின் நிறுவனர் எம்.ஆர் ரங்கசாமி.