2022 IPL: திருமண பிசியில் பிரபல வீரர்.. ஆர்சிபிக்கு எப்போதான் விளையாட வருவாரு.. கேப்டன் பொறுப்பு யாருக்கு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வேல் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்ததிற்காக க்ளென் மேக்ஸ்வெல்ளை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளன.
2022 ஐபிஎல் ஏலம்
இதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுடைய அணிக்கு வீரர்களை எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேக்ஸ்வேல் 2022 ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேக்ஸ்வெல்லுக்கு வரும் 27-ஆம் தேதி வினி ராமன் உடன் திருமணம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக இவர் சில நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வில் இருப்பார்.
மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம்
மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியின் கேப்டன் யார்?
ஆகவே ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடருடன் விலகினார். இதனால் ,ஆர்சிபி அணியின் கேப்டனாக அடுத்து மேக்ஸ்வேல் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் முதல் சில போட்டிகள் அவர் விளையாட மாட்டார் என்பதால் டூபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டூபிளசிஸை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள்
மேக்ஸ்வெல் தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். மேலும், பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 5-ந்தேதி முடிவடைகிறது. மார்ச் கடைசி வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதனால் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஹேசில்வுட், மேத்யூ வடே, டேனியல் சாம்ஸ் போன்றோர் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது.