'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க முடிவு குறித்து வெளியாகியுள்ள தகவல் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள பிரபல நிறுவனமான அக்சென்சருக்கு இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தேவை குறைந்துள்ளதால், அந்நிறுவனம் உலகளவில் 25000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், அதில் இந்தியாவில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அக்சென்சர் நிறுவன ஊழியர்களிடையே நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட், இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தேவை குறைந்திருப்பதால் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் திறன் அடிப்படையில் கடைநிலையில் உள்ள ஊழியர்களில் 5% பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காலாண்டில் அந்நிறுவனத்தின் வருமான வளர்ச்சி 1.3% ஆக குறைந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தில் நடைபெற்று வரும் சம்பள உயர்வு மதிப்பீட்டின் முடிவில் பணி நீக்க நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்சென்சர் நிறுவனம் கடந்த மாதம் இங்கிலாந்திலும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதில், அதன் 8% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அக்சென்சர் மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களும் இதேபோன்ற பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது ஐடி துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.