'கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சரின் உத்தரவு'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரின் முக்கிய உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளைத் தமிழக அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து விடுபடத் தடுப்பூசி மட்டுமே உரியத் தீர்வாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடித்து அதை ஆரோக்கியமான நபர்களுக்குச் செலுத்தி ஆய்வு செய்வதில் முழு வீச்சாக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சியைத் தமிழகத்தில் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த ஆய்வை, சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் இந்தக் கோவிஷீல்டு தடுப்பூசி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியானது டி செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை 28 நாட்களுக்குள் உடலில் உருவாக்கி விடும்.
இதற்கிடையே இரண்டாம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
