மவுசு குறையாத ராயல் என்ஃபீல்டு- இரண்டே நிமிடங்களில் விற்று முடிந்த புது பைக்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவைப் பொறுத்தவரை என்ன தான் பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு என்று தனி மவுசு எப்போதும் இருந்து தான் வருகிறது.

குறிப்பாக, மற்ற அனைத்து இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை விட ராயல் என்ஃபீல்டு எப்போதும் தங்கள் வாகனங்களுக்கு விலையேற்றத்தை விரைவாக அறிவிக்கும். அப்படி இருந்தும் அதற்கான வாடிக்கையாளர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு காரணம், கடந்த 10 - 15 ஆண்டுகளாக மக்கள் இடத்தில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம், டிரெக்கிங் செல்வது, வெகு தூரம் பைக் டிராவல் செய்வது என சொல்லிக் கொண்டே போகலாம்.
ராயல் என்ஃபீல்டு தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருவதை மேலும் ஒரு சம்பவம் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. அப்போது முதலே அந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு வானளவு இருந்தது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்கானது, உலக அளவில் வெறும் 480 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது, ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை மேலும் சூடேற்றியது. அதில் 120 மட்டுமே இந்தியாவுக்கு என்று அந்த நிறுவனம் ஒதுக்கி இருந்தது.
டிசம்பர் 6 ஆம் தேதியான நேற்று, 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளை முதலில் வாங்க வரும் 120 பேருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படியான நடைமுறைக்கு கீழ் விற்பனை ஆரம்பித்த முதல் 2 நிமிடங்களில் மொத்தம் இருந்த 120 யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 44,830 யூனிட்டுகளை இந்தியாவில் விற்றுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடும் போது 24 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தையும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தையும் ஒப்பிடும் போது 45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது ராயல் என்ஃபீல்டு.

மற்ற செய்திகள்
