‘விஜயகாந்திற்கு சேதுபதி ஐபிஎஸ் போல் மகனுக்கு...’- சண்முக பாண்டியனின் அடுத்தப்பட டைட்டில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

Vijayakanth's son Shanmuga Pandian starring cop film titled as Mithran - the cop

அதனை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பிஜி முத்தையா இயக்கிய ‘மதுர வீரன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது போலீஸ் கதையம்சம் கொண்ட புதிய திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் பூபாலன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். அர்ச்சனா, வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். அருண்ராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆக்ஷன், எமோஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘மித்ரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்ற டேக்லைனும் இடம்பெற்றுள்ளது.

கேப்டன் பிரபாகரன், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, வாஞ்சிநாதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்போது அவரது பாணியில் ‘மித்ரன்’ என்ற தலைப்பில் போலீஸ் அதிகாரியாக சண்முக பாண்டியன் நடித்து வருகிறார்.