விஜய்யின் மாஸ்டர்- லோகேஷுக்கு மட்டுமல்ல தளபதிக்கும் அவர் ரசிர்களுக்கும் கூட ஸ்பெஷல்தான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டீமுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மேலும் மாஸ்டர் பயணம் தனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது, என்னை நம்பிய விஜய் அண்ணாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மாஸ்டர் படம் லோகேஷுக்கு எப்படி ஸ்பெஷலோ அதே போல விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் செம ஸ்பெஷல் தான்.

விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் நினைவுகள் | vijay vijay sethupathy lokesh kanagaraj's master memories

பிகில் படத்தையடுத்து விஜய் படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்க, தளபதி டிக் அடித்தது லோகேஷ் கனகராஜை. இதை தொடர்ந்து ஷூட்டிங் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் மாஸ்டர் படக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஷிமோகாவில் அடுத்தக்கட்ட ஷூட்டிங். அங்கு விஜய்யை காண ரசிகர்கள் வந்ததும், தினமும் ஷூட்டிங் முடித்துவிட்டு, விஜய் அவர்களுக்கு காட்சி கொடுப்பதும் தொடர்ந்து நடந்து வந்தன. அதை தொடர்ந்து சென்னையில் சில நாட்கள் ஷூட்டிங். இப்படி விஜய் படத்தின் வேலைகள் எப்போதும் போல நடந்து கொண்டிருந்தது. ஆனால், இதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் தான் மாஸ்டரை இன்று மோஸ்ட் வான்டட் படமாக மாற்றியிருக்கிறது.

முதலில் நெய்வேலி படப்பிடிப்பு. நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் டீம் டென்ட் அடித்து, படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி கொண்டிருக்க, விஜய் மீது வருமான வரித்துறை விசாரணை செய்தது. ஆனால் இறுதியில் விஜய்யிடம் எந்த பணமும் கைப்பற்றபடவில்லை என அறிக்கை கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனது ஐடி டிப்பார்ட்மென்ட். மீண்டும் ஷூட்டிங் தொடங்க, நிலக்கரி சுரங்கத்தில் ஷூட்டிங் நடத்த கூடாது என பாஜகவினர் போராட்டம் நடத்தினர். உடனே பெருமளவு விஜய் ரசிகர்கள் நெய்வேலி ஸ்பாட்டில் குவிந்தனர். அடுத்த சில நாட்களில் ரசிகர்களின் கூட்டம் மக்கள் அலையாக மாறியது. பொதுவாக தன்னை பார்க்க வரும் ரசிகர்களுக்கு கை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய், ரசிகர்களுக்காக வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்தார். விஜய் எடுத்த மாஸ்டர் செல்ஃபி வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. விஜய்யின் மாஸை கண்டு ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கு சென்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. அதுவும் இந்த முறை அனிருத் - விஜய் கூட்டணி வேறு. இதையடுத்து குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது. விஜய் குரலில், அருண்ராஜாவின் லிரிக்ஸில் சூப்பர் கூல் பாடலாக வந்த குட்டி ஸ்டோரிக்கு வரவேற்பு வேற லெவலில் இருந்தது. இத்துடன் பாடலின் ரெக்கார்டிங்கின் போது விஜய் - அனிருத் எடுத்துக்கொண்ட போட்டோ லைக்ஸை அள்ளியது. சுட்டி குழந்தைகள் முதல் ஃபாரின் வரை குட்டி ஸ்டோரி ரீச் ஆக, படக்குழு மட்டுமின்றி, மொத்த விஜய் ரசிகர்களும் Always be happy என சில் செய்து கொண்டிருந்தனர்.

இதற்கு பிறகுதான் வேதா என்ட்ரி. ஆம், மாஸ்டரில் நடிக்கும் விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த முத்தம். இதற்கு பின்னால் நடந்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படக்குழு கொண்டாடியிருக்கிறது. பொதுவாக தன்னுடன் போட்டோ எடுக்கும் ரசிகர்களிடம், அழுத்தி முத்தம் கொடுப்பது விஜய் சேதுபதியின் வழக்கம். அப்படி சதீஷ் குமாருக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த போது, அதை பார்த்து விளையாட்டாக விஜய் முத்தம் கேட்க, விஜய் சேதுபதி அவருக்கும் தனது ட்ரேட் மார்க் முத்தத்தை கொடுத்தார். இந்த தகவல் ஆன்லைனில் பரவியவுடன், அனைவரும் அந்த போட்டோவை எதிர்பார்க்க தொடங்கினர். அடுத்த சில தினங்களில் விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த கிஸ் போட்டோ வெளியானது. குழந்தை போல விஜய் இருக்க, பாசத்துடன் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம், க்யூட் ஓவர்லோடட் போட்டோவாக கொண்டாடப்பட்டது.

இதோ இப்போது ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டார்கள். மாஸ்டர் டீமின் பல செல்ஃபிக்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. 129 நாட்கள் ப்ரேக் இல்லாமல் ஷூட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. ஆனால் இந்த 129 நாள் என்பது விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பல மெமரீஸ்களை வாரி வழங்கிவிட்டு போயிருக்கிறது. மாஸ்டர் படத்தினூடே, நடந்த இந்த சம்பவங்களை அவர்கள் எப்போது நினைவு கூர்ந்து கொண்டேதான் இருக்க போகிறார்கள். அதனால் தான் மாஸ்டர் லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமல்ல, தளபதி ரசிகர்களுக்கும் Close to Heart தான்.

படப்பிடிப்பை போல, போஸ்ட் ப்ரொடக்‌ஷனிலும் தான் ஒரு கில்லி என்பதை மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் காட்டியிருக்கிறார் லோகேஷ். அந்த மேஜிக் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷனிலும் கண்டிப்பாக இருக்கும் என்பதை நிச்சயம் நம்பலாம். இந்த மாதத்தில் போஸ்ட் ப்ரொடக்‌ஷனை முடித்துவிட்டு, சம்மருக்கு மாஸ்டர் களமிறங்க போகிறார். ரசிகர்களுக்கு மாஸ் விருந்து வைக்க போகிறார். தரமான சம்பவம் Loading...

Entertainment sub editor