www.garudabazaar.com

காட்டேரி பட shoot-ல் “மஞ்ச புடவையில் வரலஷ்மிய பார்த்து பயந்துட்டேன்!”.. அதிரவைத்த வைபவ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'.

vaibhav afraid of varalaxmi sarathkumar getup in katteri shoot

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் டீகே பேசுகையில், “இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?” என என்னிடம் கேட்டிருக்கிறார்.

நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,  “காட்டேரி நான் சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன். அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.” என்றார்.

நடிகர் வைபவ் பேசுகையில், “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. 

நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன். ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ,  பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

vaibhav afraid of varalaxmi sarathkumar getup in katteri shoot

People looking for online information on Vaibhav, Varalaxmi Sarathkumar will find this news story useful.