www.garudabazaar.com

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் .. வைரலாகும் ‘தெருக்குரல்’ அறிவு & சந்தோஷ் நாராயணனின் பதிவுகள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு குரலில் கடந்த ஆண்டு ‘என்ஜாய் எஞ்சாமி'  ஆல்பம் பாடல் வெளியானது.

Therukural Arivu Santhosh Narayanan posts enjoy enjaami issue

ஆதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடலாக இப்பாடலை அறிவு உருவாக்கி இருந்தார். உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலில் வரும் வள்ளியம்மாள் ‘தெருக்குரல்’ அறிவின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியிட, பின்னாட்களில் இப்பாடல் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. உலகமெங்கும் ஹிட் அடித்த இந்த பாடல் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின்  பங்கேற்க, இவர்கள் முன்னிலையில் நடந்த சென்னையில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடி பெர்ஃபார்ம் பண்ணியிருந்தார்கள்.

ஆனால் இந்த நிகழ்வில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு தோன்றாதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் சலசலக்கத் தொடங்கியது, இந்நிலையில் இது தொடர்பாக தெருக்குரல் அறிவு தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு விளக்க பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், “இந்த பாடலை எழுதி, இசையமைத்து நான் பாடினேன். இப்பாடலை எழுந்த எனக்கு யாரும் ஒரு டியூனோ, மெலடியோ அல்லது வரிகளோ கொடுக்கவில்லை. சுமார் 6 மாதங்களாக தூங்காமல், மன அழுத்தம் நிறைந்த இரவு பகலுக்கு நடுவில் நான் உழைத்தேன். எனினும் இப்பாடல் அனைவரின் கூட்டு முயற் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இப்பாடல் வள்ளியம்மாளின் வரலாறோ அல்லது நிலமில்லாத தேயிலைத் தோட்ட அடிமைகளாக என் முன்னோர்களை காட்டும் வரலாறோ இல்லை. என் ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறையினரின்  ஒடுக்குமுறை குறித்த அடையாளம். இப்படி இந்நாட்டில் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.

இது என் முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, எதிர்ப்பு குறித்த பாடல். பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலி இந்த பாடல். நம் மரபுகளைப் இப்பாடலில் எடுத்துச் செல்கிறோம். நீங்கள் தூங்கும்போது உங்களுடைய சொத்தினை யாராவது எடுத்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் உண்மையே வெல்லும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

இந்நிலையில் தற்போது இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “2012-ல் அறிமுகமான எனக்கு 10 வருடங்களாக அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி. நான் இப்போது வேறு மொழியில் 'indie' இசையில் கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டு வருகிறேன். இப்போது என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து...

கடந்த 2020-ம் ஆண்டு நமது பண்பாட்டை கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூற, பிறகு `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ் செய்து புரோகிராமிங் மற்றும் ரெக்கார்டிங் செய்து, உடன் கோ சிங்கராக பாடினேன். இந்த எனது பணி உலகளவில் `தயாரிப்பாளர்' என்று சொல்லப்படுகிறது.

நான், தீ, அறிவு மூவரும் ஒருவர் மேல் ஒருவரது அன்பிற்காகவும், இண்டிபெண்டெண்ட் இசை மேல் உள்ள காதலுக்காகவும் இணைந்தோம். தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொள்ள, தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல்கள் எழுத, நான் மீதி இசை, அறிவு பகுதிக்கான ட்யூனை கம்போஸ் செய்தேன்.

இதை திரைக்கதையாக உருவாக்கி, அறிவுடன் நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) நன்றி. அவரது 'கடைசி விவசாயி' படமே இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன். பாடலின் ஒப்பாரி வரிகள் அரக்கோணம் சுற்று கிராம பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பு. அவர்களை அறிவுக்கு நன்றி.  எனக்கு மிகவும் பிடித்தது ‘பந்தலுல பாவக்கா’ ஒப்பாரி பாடல்.

ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி உள்ளிட்ட எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானும் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். அவற்றில் 'என்ஜாயி என்ஜாமி' எனும் என்னுடய பொருத்தமில்லாத ஒரு சொற்றொடரை வைத்து அறிவு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் மகிழ்ச்சி. 30 மணி நேரத்திற்குள் உருவான இப்பாடலை தொடர்ந்து, இதன் படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்த நிலையில், எங்களின் பணி வேகமாக இருந்தது.

பாடலின் மொத்த வருமானமும், உரிமங்களும் தீ, அறிவு, நான் மூவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். தீ மற்றும் அறிவுக்கு பக்கபலமாக நின்ற கலைஞர்களுக்கு   பாரபட்சமின்றி கிரெடிட் கொடுத்திருக்கிறோம். என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு குறித்த எனது பேச்சு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி எஞ்சாமி நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்ததால் அறிவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது தற்போதைய அமெரிக்க பயணம் குறித்த காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் முன்பே தெரிவிக்கப்பட்டது.

அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல், அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு கொடுத்த அதே ஆதரவையும் அன்பையும் 'கீச்சே கீச்சே' வுக்காக அறிவுக்கு கொடுப்பது, ஒரு கலைஞனாக பொருத்தமாக இருக்கும்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க எனது தளத்தை எப்போதும் நான் பயன்படுத்தியிருக்கிறேன். எனது வாழ்க்கை, கலை இரண்டுமே சான்று. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நான் தொடரும் பணிமுறை, கலாச்சாரம் மற்றும் தோழமை எல்லாமே சாட்சி. கலை மீதும், அனைத்து கலைஞர்களின் மீதும் அன்பு கொண்டுள்ளேன். புதிய பல தமிழ் குரல்களின் எழுச்சியை வரும் மாதங்களில் உலகளவில் காண்போம்!

அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றி. இந்த ஸ்பெஷல் பாடல் தொடர்பில் யாருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு முற்றிலும் நான் தயாராக இருக்கிறேன். மேலும் பல கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எம் தார்மீக நோக்கம். வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Therukural Arivu Santhosh Narayanan posts enjoy enjaami issue

People looking for online information on Arivu, Dhee, Enjoyee enjaami, Santhosh Narayan, Santhosh Narayanan, Therukural arivu will find this news story useful.