ஃபோன் பண்ண சிம்பு, 'மாநாடு' மீண்டும் தொடங்குமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 10:29 AM
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு சிம்புவும் வெங்கட் பிரபுவும் 'மாநாடு' படத்தில் இணையவுள்ளதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவுப்பு வெளியானது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படம் பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் சிம்பு அல்லாமல் வேறு சில மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் என்பது போல அறிவித்தார்.
இது திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாள் என்பதால் நடிகர் சிம்பு அவருக்கு ஃபோனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாராம். இதனால் சிம்பு நடிக்க மாநாடு மீண்டும் தொடங்கும் என்பது போல செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் எங்கள் தரப்புக்கு கிடைத்த தகவலின் படி, சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இன்னும் நல்ல உறவு தொடர்வதாகவும் சில தவறான தகவல் பரிமாற்றத்தின் காரணமாகவே தயாரிப்பாளரின் அறிவிப்பு வெளியானதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் சிம்பு நடிக்க மீண்டும் தொடங்குமா அல்லது வேறு ஹீரோ நடிப்பில் உருவாகுமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தெரிந்துவிடும்.