'தற்கொலைக்கு எதிராக தனது படத்தில் Strong-ஆக பேசிய சுஷாந்த் சிங்..! - சிச்சோரே சொல்லும் பாடம் என்ன.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மும்பை வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் வரையில் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை மூலம் தனது அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு, பாலிவுட் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்த சுஷாந்த்திற்கு காய் போ சே, பி.கே உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். கிட்டத்தட்ட இத்திரைப்படத்தில் இவர் நடித்தார் என்பதை தாண்டி, தோனியாகவே வாழ்ந்து இருப்பார். இப்படி தனது சினிமா பாதையில் பக்காவாக பயணித்து கொண்டிருந்த இவர் கடந்த ஆண்டு நடித்த திரைப்படம்தான் 'சிச்சோரே'.

சுஷாந்த் சிங் நடித்த சிச்சோரே - ஒரு பார்வை | remembring late actor sushant singh rajput's chhichhore

அமீர் கான் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த தங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இத்திரைபடத்தை இயக்கினார். இதில் சுஷாந்த் சிங்குடன், ஷ்ரதா கபூர், வருண் ஷர்மா, நவீன் பொலிஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 இடியட்ஸ் திரைப்படத்தை போல கல்லூரியில் படிக்கும் ஹாஸ்டல் நண்பர்களின் கதையை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தின் நகைச்சுவை பெரிதும் ரசிக்கப்பட்டது. அதே வேளையில், மற்றுமொரு முக்கியமான விஷயத்தை இத்திரைப்படம் சுட்டி காட்டியது. அது வாழ்க்கையில் வெற்றி தோல்வி குறித்தும், தற்கொலை எண்ணம் குறித்தும் இத்திரைப்படம் வலிமையாக பேசியது. இப்படியோர் திரைப்படத்தில் நடித்த சுஷாந்த், தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தும் நேரத்தில், சிச்சோரே திரைப்படம் குறித்து இப்போது பேசுவது மிகவும் அவசியமாகிறது.

இத்திரைப்படத்தின் ஆரம்பமே, சுஷாந்த் சிங்கின் மகன் தற்கொலை முயற்சியில் தான் தொடங்குகிறது. படிப்பில் தோல்வி கண்டு தற்கொலைக்கு முயன்ற அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தனது கல்லூரி கதையை சொல்ல துவங்குவார் சுஷாந்த். ஒரு கல்லூரி, அங்கு இருக்கும் ஹாஸ்டல். ஆனால், அது எல்லோருக்கும் சமம் அல்ல. பணக்காரர்களுக்கும் திறமையானவர்களும் தனி மரியாதை..., மற்றவர்களுக்கு எல்லாம் Losers-க்கான தனி ப்ளாக். இப்படி ஒரு இடத்தில் விளையாட்டில் நல்ல திறமை இருந்தும், சுஷாந்த் அந்த லாஸர்ஸ் ப்ளாக்கை தேர்ந்தெடுக்கிறார். காரணம் அங்குதான் அவர் உண்மையான நண்பர்களை சந்தோஷத்தை கண்டறிகிறார். எப்போதும் கோபப்பட்டு கெட்ட வார்த்தைகளேயே பேசும் ஒருவன், காமத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டவன், பாட்டிலும் கையுமான திரியும் பேவ்டா, எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்கும் ஒல்லி இளைஞன் என இந்த கதாபாத்திரங்கள் ஹாஸ்டல் வாழ்க்கையில் அடிக்கும் கூத்துக்களுடன் செல்லும் இத்திரைப்படம், ஒரு கட்டத்தில் அவர்கள் losers இல்லை என்பதை நிருபிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு போட்டியாக வென்று, ஃபைனல் வரை வந்து, ஒட்டுமொத்த கவனைத்தை தங்கள் மீது திருப்புகின்றனர் இந்த Losers. கிட்டத்தட்ட நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்தபடி, அவர்கள் இறுதியில் போராடி வெற்றி பெற்று, நம் அனைவருக்கும் உலக கோப்பை ஃபைனலில் இந்தியா ஜெயித்த உணர்வை கொடுத்து வீட்டுக்கு அனுப்ப இயக்குநர் விரும்பவில்லை. மாறாக இவ்வளவு தூரம் போராடி வந்த அந்த Losers டீம் இறுதியில் தோற்றே போகிறது. அதுதான் வாழ்வின் யதார்த்தம். ஆனால் அந்த தோல்வி அவர்களை வருத்தப்பட வைக்கவில்லை. அந்த தோல்வி அவர்களுக்கு Losers என்ற பட்டத்தை தரவில்லை. அந்த அணியில் இருந்து ஒவ்வொருவரும் வாழ்வில் பெரிய இடங்களை அடைகிறார்கள். காரணம், அந்த தோல்வி அவர்களுக்கு கொடுத்தது படிப்பினை.

சிச்சோரே திரைப்படத்தில் வசனங்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக வாழ்க்கை குறித்து மிக நுட்பமான வார்த்தைகளை  கொண்டிருந்தன. ''உன்னுடைய ரிசல்ட் முடிவு செய்யாது, நீ தோத்து போய்ட்டியா இல்லையான்னு, உன் முயற்சிதான் அதை முடிவு செய்யணும்''., ''மத்தவங்க கிட்ட தோத்து போய் Loser-ன்னு சொல்லப்படுறது கூட பரவாயில்ல, ஆனா உன்கிட்டையே நீ தோத்து போய் Loser ஆகுறதுதான் மோசம்'' இப்படியான வசனங்கள் படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்தன.

இப்படி வாழ்க்கையை மிக பாசிட்டிவாக அணுகிய ஒரு படத்தின் நாயகன், இப்படியோர் நெகட்டிவான முடிவை அடைந்திருப்பது நமது கண்களை கலங்க செய்யலாம். ஆனால் இந்த நேரத்தில் சிச்சோரே திரைப்படத்தில் சுஷாந்த் பேசிய முக்கியமான வசனத்தை நினைவுக்கூர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது..,

''நாம் எல்லோரும் வெற்றிக்கு பிறகு, அடுத்தடுத்த என்ன செய்யலாம் என திட்டங்களை வைத்திருக்கிறோம். ஒருவேளை அதில் தோல்வி அடைந்துவிட்டால். அந்த தோல்விக்கு பிறகு என்ன செய்யலாம் என நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது. ஏன் நாம் யாரும் அதை பற்றி பேச மறுக்கிறோம்'' என உணர்ச்சி பெருக்கோடு பேசியிருப்பார் மறைந்த இந்த நடிகர். தோல்விகள் குறித்தும், அது தரும் அழுத்தம் குறித்தும், வாழ்க்கையின் சந்தோஷங்கள் குறித்தும் நாம் பேசி ஆக வேண்டும் எனும் உண்மையை சுஷாந்தின் மரணம், ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அதை உணர்ந்து வரப்போகும் காலங்களில் அன்பை மட்டுமே விதைத்து, அனைவரையும் அரவணைத்து வாழ்வ்வோம்.

''வெற்றி, தோல்வி, Success, Failure, இதை எல்லாம் தாண்டி நாம வாழ்க்கையை வாழ மறந்துட்டு இருக்கோம். வாழ்க்கையோட முக்கியமான விஷயமே, வாழ்றதுதானே...'' - சுஷாந்த் சிங் ராஜ்புத்.

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் நடித்த சிச்சோரே - ஒரு பார்வை | remembring late actor sushant singh rajput's chhichhore

People looking for online information on Chhichhore, Sushant Singh Rajput will find this news story useful.