கொலவெறி முதல் குட்டி ஸ்டோரி வரை.! அனிருத்தின் தொட்டெதெல்லாம் ஹிட்டான கதை.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரியாக 8 வருடம் முன்பு, இதே நாளில் தனுஷ் நடிப்பில் 3 படம் வெளியானது. தனுஷின் க்ளாஸ் நடிப்பு, மயக்கும் காதல் காட்சிகள், சிவகார்த்திகேயனின் சூப்பர் கவுன்ட்டர்கள் என 3 படத்தில் பல விஷயங்கள் இருந்தது. அதையெல்லாம் கடந்து, இன்னொரு விஷயமும் தனித்து கவனிக்கப்பட்டது. அது அனிருத்தின் இசை. பார்க்க ஒல்லியாக கிட்டத்தட்ட காதல் கொண்டேன் தனுஷ் போல அறிமுகமான அந்த உடல் ஆயிரம் ஆட்டோ பாம்களுக்கு நிகர் என இப்போது தெரிகிறது. அப்படியான அனிருத்தின் இசைப்பயணம்.. ஒரு பார்வை.

remembering music director anirudh on his 8 year anniversay | அனிருத்தின் 8 வருட இசைப்பயணம்.

பிறந்ததிலிருந்தே சினிமா பின்புலம் கொண்ட குடும்பம். ரஜினி, தனுஷ் என தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் எல்லாம் சொந்தம். கல்லூரி விழாக்களில் தன் இசையால் கலக்கியவர், தனுஷுடன் சேர்ந்து கொண்டு அவர் எடுக்கும் ஷார்ட் ஃபிலிம்களுக்கும் இசையமைத்தார். அது அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்த நிலைதான் 3. முதல் அறிமுகத்திலேயே உலகம் முழுவதிலும் போய் சேர்வது மிகவும் அரிதான விஷயம். அது அனிருத்துக்கு நடந்தது. Why this kolaveri மூலம் உலகத்தையே ஆட வைத்த வைரல் ஹிட் இசையமைப்பாளர் ஆனார். ஒரு பாட்டு தானே என நினைத்தவர்களுக்கு, 3 படத்தின் ஆல்பத்தை பதிலாக கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார் அனிருத். 3 படத்துக்கு அனிருத் போட்ட பாடல்களை, சந்தோஷமோ துக்கமோ, காதலின் எல்லா சூழ்நிலையிலும் பொருத்தி பார்க்கலாம். முதல் பாலில் சிக்ஸர் அடித்தவர், அடுத்தடுத்த பந்துகளை ஸ்டேடியத்துக்கு வெளியே அடித்த கதை, அனிருத்தின் அடுத்தக்கட்ட படங்கள்.

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே என அனிருத் இளம் ஜெனரேஷனின் ஃபேவரைட்டாக மாறத் தொடங்கினார். இந்த மூன்று படங்களிலும் அனிருத் போட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இசையமைப்பாளராக கலக்கிய அனிருத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது தனுஷின் வேலையில்லா பட்டதாரி. இத்திரைப்படத்தின் பாடல்கள் யாவும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. எல்லோருக்கும் பிடிக்கும்படியான இந்த ஜெனரேஷன் பாடல்களை கொடுத்து கவர்ந்தது ஒருபக்கமிருக்க, ஊதுங்கடா சங்கு என ரகுவரனின் சோகத்தையும், அம்மா.. அம்மா என ரகுவரனின் இழப்பையும், தன் இசையின் மூலம் ஆழமாக சொல்லி, ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்கான அங்கீகாரத்தை அடைந்தார் அனிருத். இப்படி இருந்த அனிருத்தின் க்ராஃபை பீக்கில் போகச் செய்த படம், விஜய்யின் கத்தி. இசைப்பயணம் ஆரம்பித்த சில நாட்களிலேயே விஜய்க்கு இசையமைப்பாளர் என்பது எப்படி ஒரு மகிழ்ச்சியை தருமோ, அதைவிட அதிகமான சவாலை தரும். அதுவும் துப்பாக்கிக்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. ஆனால், அனிருத் கொஞ்சமும் அசராமல் அடித்து நொறுக்கினார். அதற்கு கத்தி தீம் மியூசிக் ஒன்றே சான்று. கத்திகளை உராசியபடி தொடங்கும் அந்த மியூசிக் இன்று வரையிலும் அநேக விஜய் ரசிகர்களின் ரிங்டோனாக நீடிக்கிறது. கதிரேசனுக்காக மாஸ் மியூசிக் ஒரு பக்கம், ஜீவானந்தத்துக்காக மனதை உருக்கும் இசை ஒரு பக்கம் என அனிருத் ஆல் ஏரியாவிலேயும் கலக்கினார்.

இதை தொடர்ந்து காக்கி சட்டை, மாரி, நானும் ரவுடிதான் என அனிருத் இசையமைத்த பாடல்கள் எல்லாம் தொட்டதெல்லாம் ஹிட்டான கதைதான். அடுத்து முதல்முறையாக அஜித்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு. யார்தான் சும்மா இருப்பார்கள், ஒவ்வொரு மாஸ் சீனுக்கும் தனது இசையால் கூடுதல் மாஸை கூட்டினார் அனிருத். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகமே ஆடும் அளவுக்கு ஆலுமா டோலுமா என ஒரு தெறி குத்து குத்தினார் அனிருத். இதை தொடர்ந்து தங்கமகன், ரெமோ, விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா என இசையமைத்த படங்களில் எல்லாம் தனது ட்ரேட்மார்க்கை பதித்தார் அனிருத். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் மியூசிக் செய்தவருக்கு, அடுத்து சூப்பர்ஸ்டார் பட  வாய்ப்பு. ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும். பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் வைத்த ஒவ்வொரு காட்சியையும் தன் இசையால் செதுக்கினார் அனிருத். பேட்ட தீம் மியூசிக் என க்ளாஸாக ஒன்று, பேட்ட வேலனுக்கு செம மாஸான ஒரு மியூசிக் என அனிருத் ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். மீண்டும் ரஜினிக்கு மியூசிக் போட தர்பார் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்க, சும்மா கிழி என கிழித்தார் அனிருத். தரம் மாறா சிங்கிள் என தனது ஸ்டைல் பாடலில் ரஜினியை பக்காவாக பொருத்தி அசத்தினார்.

இதோ இப்போது விஜய்யின் மாஸ்டர். விஜய் - அனிருத் சேர்ந்தாலே மேஜிக் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குட்டி ஸ்டோரி என்ற பாடலின் மூலம் மொத்தமாக பாசிட்டிவிட்டியை கடத்துவது எல்லாம் அனிருத்தின் ப்யூர் வெறித்தனங்கள். யுவன், சந்தோஷ் நாராயணன் என பெரும் இசையமைப்பார்களின் குரல்களில் பாடல்கள், மனதை வருடம் மழலைக்குரலில் போனா போகட்டும், தெறிக்கும் அறிவு பாடிய வாத்தி ரெய்டு என மாஸ் காட்டிய அனிருத், குயிட் பண்ணுங்கடா பாடலில், குடிக்காமலேயே போதை ஏற்றும் இசையை கொடுத்திருக்கிறார். இந்த 8 வருடத்தில், தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராகி இருக்கிறார். ஆனால் அதுவொன்றும் சாதாரணமாக நடந்துவிடவில்லை. படத்துக்கு படம் அவர் கொடுத்த உழைப்பு. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை கவனிக்கப்பட வேண்டும் என அவர் காட்டிய ஆர்வம். இவை எல்லாம்தான் இன்று அவருக்கு ராக்ஸ்டார் பட்டத்தை பெற்று தந்துள்ளது. அனிருத்தால் ஆலுமா டோலுமாவும் போட முடியும், யார் பெற்ற மகனோவுக்கும் இசையமைக்கவும் முடியும்.  அப்படி அவர் காட்டும் வெரைட்டிதான், அவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடக் காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த 8 வருடங்கள் மட்டுமல்ல, இனி வரப்போகும் எத்தனையோ வருடங்களுக்கு தன் இசையால் நம்மை வசப்படுத்த போகும் ஹிட் மெஷினுக்கு வாழ்த்துக்கள்.

Entertainment sub editor