அன்னைக்கு கோவில் கட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அன்னையர் தினத்தன்று ‘தாய் அமைப்பு’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை பாதுகாக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் டெல்டா பகுதியை சுறையாடிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் பலரும் வீடுகளை இழந்து தவித்தனர். அதில் குறிப்பாக சமூக சேவகர் கணேசனின் வீடும் பாதிப்புக்குள்ளானது. கணேசன் சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம், ஒக்கி புயல், உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பல உதவிகளை செய்தவர். ஆனால், கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்து தவித்தார்.
இது குறித்து அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தருவதாக வாக்களித்திருந்தார், அதன்படி வீட்டை கட்டி முடித்து, கணேசனின் புதிய வீட்டின் கிரகபிரவேச நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டார்.
இது தொடர்பாக பேசிய லாரன்ஸ், என்னுடைய ஒவ்வொரு அடிக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள், தாய்மார்கள், முக்கியமாக குழந்தைகள் தான். அவர்களுக்கு நன்றி சொல்வதோடு என் கடமை முடிவதாக கருதவில்லை, அதற்காக சில முயற்சிகளை செய்து வருகிறேன். அதன் தொடக்கமாக தற்போது தாய் அமைப்பை நிறுவியிருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகும் 15 நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்.
காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிப்பதற்கு காரணம் குழந்தைகள் தான். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே தொடங்க விரும்புகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.
மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார்.