விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் பங்கேற்கும் 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன்ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கடைசி போட்டியாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரேஷ்மா பசபுலெட்டி குறித்த சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என சுமார் 12 திரைப்படங்களில் நடித்துள்ள ரேஷ்மா பசபுலெட்டி, ‘வாணி ராணி’, ‘மரகத வீணை’, ‘வம்சம்’ உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர், கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, நிக்கி கல்ராணிஆகியோர் இணைந்து நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் பிரபலமானார்.
அந்த படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேஷ்மா, புஷ்பா புருஷன காணோம் என்ற காமெடி மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின் அமெரிக்கா சென்ற நடிகை ரேஷ்மா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3வது சீசனின் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.