It's Official: பிரபல கிரிக்கெட் வீரர் பயோப்பிக்கில் நடிக்கும் மக்கள் செல்வன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

Makkal Selvan Vijay Sethupathi to play Muthiah Muralidharan's role in cricketer's official biopic

தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரன் டைட்டில் ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கவிருக்கிறார். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ‘உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்'.

'தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில்  வெளியாகவுள்ளது. பிரபல தென்னிந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்திற்காக பணியாற்றி வருகிறோம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடவிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில்,  ‘எனது வாழ்வின் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில்  நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் எனது கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன் . நான் இப்படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

இப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், ‘முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தமிழ் விளையாட்டு வீரர்களின் ஒரு சின்னமாக திகழும் முத்தையா முரளிதரன், உலகெங்கும் தன் திறமையை நிரூபித்துள்ளார். முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது'. 

'இந்த சவாலை நான் ஆவலோடு எதிர் கொள்ளவிருக்கிறேன். முரளி! எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார் என்பதை அறிந்தும் அவர் தாமே எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார் என்பதை அறிந்தும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் முரளி அவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.