சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘களவாணி’. கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படம் யதார்த்தமான காதல், காமெடி என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் களவாணி 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தையும் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ளார். இதிலும், விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசன், கஞ்சா கருப்பு, ஆர்ஜே விக்னேஷ்காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தடைகளை தாண்டி இன்று(ஜூலை.5) ‘களவானி 2’ ரிலீசாகிறது.
முன்னதாக, இப்படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இயக்குநர் சற்குணம் தன்னிடம் வாங்கிய ரூ.67 லட்சம் பணத்தை வட்டியுடன் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, இப்படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ் அனைத்தையும் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பண பாக்கியை செட்டில் செய்துவிட்டதாகவும் சற்குணம் விளக்கம் அளித்ததையடுத்து, இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விளக்கத்தை ஏற்று களவானி 2 திரைப்படத்தை ரிலீஸ் செய்ய க்யூப் நிறுவனத்திடம் அனுமதியும் கோரியுள்ளார்.
ஏற்கனவே விநியோகஸ்தர் சிங்காரவேலன் விமல் தர வேண்டிய பண பாக்கிக்காக நீதிமன்றத்தில் படத்திற்கு தடை வாங்கினார். பின்னர், பேச்சு வார்த்தையில் தீர்க்கப்பட்டு தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.