தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறும் எனறும், இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக 61 பேர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போதைய சங்க நிர்வாகத்திடம் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சங்க நிர்வாகிகள் அளித்த விளக்கம் பரிசீலிக்கப்பட்டதாகவும், விளக்கத்தை ஏற்று, தற்போதைய சூழலில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. எனவே அனைத்து விவரங்கள் குறித்து தீர்வு காணும் வரை நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் (எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரி) இடத்தை மாற்ற சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.