நாசர் தலைமையிலான பாண்டவர் அணி திருச்சி மாவட்ட நாடக நடிகர்களைச் சந்தித்து தங்களுடைய திட்டங்களை எடுத்துரைத்து பாண்டவர் அணிக்காக ஆதரவு திரட்டினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.
இந்தத் தேர்தலில் நாசர் தலமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, இரு அணியிரனரும் தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் pஆண்டவர் அணி சார்பாக தற்போதைய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் தலைமையில் நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன், சரவணன், மனோபாலா, ஜெயரத்தினம், விக்னேஷ், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் நேற்று தமிழகம் முழுக்க பயணம் மேற்கொண்டனர்.
இந்த குழு திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து இறுதியாக வரும் 18-ம் தேதி சேலத்தில் தங்களின் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்யவுள்ளனர். அதில் முதற்கட்டமாக திருச்சியில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். இதையடுத்து, இன்று காரைக்குடி மற்றும் மதுரையில் நாடக நடிகர்களை சந்தித்து ஆக்கு சேகரித்தனர்.
பாண்டவர் அணியின் சார்பாக மதுரையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கலந்துக் கொண்டார். திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என பாண்டவர் அணியினருக்கு நாடக நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மதுரையை தொடர்ந்து நாளை (ஜூன்17), திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை மறுநாள் ஜூன்.18ம் தேதி சேலம் ஜிஆர்டி ஹோட்டலிலும், வேலூர் பென்ஸ் பார்க் ஹோட்டலிலும் நாடக கலைஞர்களை பாண்டவர் அணியினர் நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர்.