தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவுள்ள பாண்டவர் அணியினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார். இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இரு அணியினரும் வேட்பு மனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பாண்டவர் அணியினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். சுமார் 60 ஆண்டுகள் பழமையான நடிகர் சங்கத்தின் நலனுக்காக கடந்த தேர்தலில் பேராதரவுடன் வெற்றி பெற்ற பாண்டவர் அணி மீண்டும் இம்முறை போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலின் போது நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகத்தில் பல்வேறு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டப்பட்டது. அது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது முறையான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே தேர்தலில் நிற்கும் சூழலுக்கு ஆளானதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். மேலும், நாடக கலைஞர்களுக்கு நடக்கப்போகும் நல்லதை யாராலும் தடுக்க முடியாது என்ரும் திட்டவட்டமாக அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் சங்க தேர்தலின்போது பாண்டவர் அணியினர் அளித்த வாக்குறுதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது. தங்களது கனவு கட்டிடமான சங்க கட்டிடத்தை கட்ட சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 4 மாடிகளை கொண்ட சங்க கட்டிட பணிகள் தொடங்கின. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
பாண்டவர் அணியினர் அளித்த வாக்குறுதிகளின்படி, உறுப்பினர்களுக்கு எளிதில் உதவி செய்ய இணையதளம், மூத்த உறுப்பினர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2500 வரை உதவித்தொகை, மாற்று திறனாளி உறுப்பினர்களுக்கு ரூ.3000 உதவித் தொகை, உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தறபோதைய நிர்வாகத்தால் சங்கத்தில் வரவு செலவு கணக்குகள் முறையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் மாதம் ரூ.25 லட்சம் வரை வருமனம் ஈட்டி உறுப்பினர்களுக்கு உதவி செய்ய பாண்டவர் அணியினர் பல நலத்திட்டங்களை வைத்துள்ளனர். இந்த கட்டிடத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட அரங்கில் நாடகங்களை நடத்தி நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
‘யாராலயும் தடுக்க முடியாது’ - நடிகர் சங்கம் தேர்தல் குறித்து விஷால் வீடியோ