“நான் கடைக்குட்டி இல்ல.. கத்துக்குட்டி”- சேரனின் வாழ்த்துகளில் நெகிழ்ந்த பாண்டிராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாண்டிராஜ் இயக்குநராக அறிமுகமான ‘பசங்க’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Director Pandiraj and director Cheran shares sweet memories on 10 years of Pasanga

இயக்குநர் சசிக்குமார் தயாரிப்பில் உருவான ‘பசங்க’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கிஷோர், ஸ்ரீராம், பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் விமல், வேகா தமோதியா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி நேற்றுடன்(மே.1) 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாண்டிராஜ் தனது ஆரம்ப கால சினிமா பயணம் முதல் இந்த 10 ஆண்டுகளில் தான் இயக்கிய 8 படங்கள் வரையிலான அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். உதவி இயக்குநராக டைட்டில் கார்டு வர வேண்டும் என்ற ஆசையில் கோடம்பாக்கம் வந்த பாண்டிராஜ் 7 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற பேராசையில் இருந்த அவருக்கு சசிக்குமார் மூலம் அந்த கனவும் நிறைவேறியதாகக் கூறியதுடன், தனக்கு உதவிகள் பல செய்த இயக்குநர்களின் பட்டியலையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் இயக்குநர் சேரனின் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், சேரன் இயக்குநர் பாண்டிராஜிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரனிடம் பாண்டிராஜ் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்ட நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகின்றன. உதவி இயக்குநரான பாண்டிராஜை சார் என்று குறிப்பிட்டு சேரன் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் ட்வீட் போட்ட பாண்டிராஜ், “பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. நீங்க இமயம் நான் கடுகு. நான் கடைக்குட்டி மட்டும் இல்லை கத்துக்குட்டி. இன்னும் உங்களிடம் கத்துக் கொண்டிருப்பவன் சார்” என ட்வீட்டியுள்ளார்.