“பிரியமுடன் விஜய்..”- பிகில் தயாரிப்பாளருக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 17, 2019 04:21 PM
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு, நடிகர் விஜய் கையோப்பமிட்ட கால்பந்து ஒன்றை வழங்கியுள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் , “பிரியமுடன் விஜய் டூ அர்ச்சனா..” என்று விஜய் தனது கைப்பட எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ள கால்பந்து தனது நாளை சிறப்பானதாக மாற்றியதாகக் கூறி விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்கள் பிகிலடித்து பிகில் படத்தை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி, சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.