"மகன் பொறந்துட்டான்".. 3 நாட்கள் கழித்து அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா.. வாழ்த்தும் ரசிகர்கள்!!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனவர் அஜய் கிருஷ்ணா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அஜய் கிருஷ்ணா, தனது வசீகர குரல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டார். அதே போல, பிரபல பாடகர் உதித் நாராயணன் குரலில் அஜய் கிருஷ்ணா பாடுவது இன்னும் அவரை புகழ் பெற வைத்திருந்தது.
Image Credit : Ajay Krishna Instagram
இதனிடையே, சமூக வலைத்தளம் மூலம் தனக்கு பிரபலமான ஜெஸ்ஸி என்ற பெண்ணுடன் பழகி வந்த அஜய் கிருஷ்ணா, நாளடைவில் அவரை காதலிக்கவும் தொடங்கி உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி வந்த சூழலில், பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தனது பிறந்த நாளில் தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடனும் பகிர்ந்து இருந்தார் அஜய் கிருஷ்ணா. தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி ஜெஸ்ஸியுடன் இணைந்து போட்டோ சூட் நடத்தியது தொடர்பான புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வந்தார் அஜய்.
Image Credit : Ajay Krishna Instagram
மிகப்பெரிய அளவில் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகவும் செய்திருந்தது. இதனால், விரைவில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்த தகவலையும் வெளியிடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதிக்கு கடந்த 12ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி ஜெஸ்ஸி கர்ப்பமாக இருந்த சமயத்தில் எடுத்த ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்த அஜய் கிருஷ்ணா, "பிப்ரவரி 12ஆம் தேதி நாங்கள் அதிகாரப்பூர்வமாக எங்கள் குட்டி மகனுக்கு பெற்றோராகி விட்டோம்" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கள் மீது அன்பும், அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் அஜய் கிருஷ்ணா.
குழந்தை பிறந்து மூன்று நாட்கள் கழித்து இது தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வமாக அஜய் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள சூழலில், இந்த தம்பதியருக்கும், புதிதாக பிறந்துள்ள அவர்களின் குழந்தைக்கும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.