நடிகர் ஷாந்தனு மணிரத்னத்தின் கதை மற்றும் தயாரிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து 'மாஸ்டர்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் ஷாந்தனு அடுத்து நடிக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவரது தந்தையும் பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் அதுல்யா ஷாந்தனுவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு தரண் இசையமைக்க, ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீஜர் இயக்கவுள்ளார். ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.