''கடைசி மரியாதை கூட செய்ய... போய் வா நண்பா'' - இயக்குநர் விசு மரணம்.. நடிகர் சிவகுமார் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விசுவின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விசுவுக்கு சிவகுமார் இரங்கல் | actor sivakumar emotional note on director visu's death

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விசு. மேடை நாடங்களிலும் ஆர்வம் கொண்ட இவரின், மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதுமட்டுமின்றி டிவி சேனல் பேச்சு நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பதிலும் இவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று விசு அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''அன்பு விசு !டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்..‘சம்சாரம் அது மின்சாரம்’-‘மணல் கயிறு’- இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள..‘அரட்டை அரங்கம்’- அகில உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை  மாணவ மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள். மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக படைப்புக்களில்  வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழ்க்கையிலும் ஆரோக்கியத்துக்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள் . இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்..மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆகவேண்டும்.உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம்,ரயில் பயணம், விமானப்பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.. வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க 144 தடை உத்தரவு வேறு. என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன். பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய் போய் வா நண்பா !அடுத்த பிறவியில் சந்திப்போம்'' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor