www.garudabazaar.com

Sardar: “டபுள் ஆக்‌ஷன் ஏன்..”.. சர்தார் படத்தின் மிரட்டலான ஒன்லைன் இதானா..? - உடைத்து பேசிய கார்த்தி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார்.

Actor Karthi reveals Sardar One line and why dual role

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசினர்.  இதில் நடிகர் கார்த்தி பேசும்போது, “மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு, பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சர்யபட வைத்தது. அவர் மீது ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு ஹீரோ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பின்பு லக்ஷ்மன் அவரை சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக் கூறினார்.

மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள். அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தகவல் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதிவிட்டு வாருங்கள் என்று கூறினேன். அவர் எழுதி விட்டு இந்தக் கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரமாக மாறி இருக்கிறது என்று கூறினார். மறுபடியும் இரட்டை வேடமா? வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் காலத்திலும் வந்திருக்கிறது. ரஜினி சார், கமல் சார் காலத்திலும் நடந்திருக்கிறது. அண்ணனும் அயன் படத்தில் பல்வேறு வேடங்களில் தோன்றினார். அவருக்கு எல்லாம் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும். அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.

மேலும், அதை எப்படி ஏமாற்றாமல் உண்மையாக பண்ண முடியும் என்பதற்கு தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.” என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi reveals Sardar One line and why dual role

People looking for online information on GV Prakash Kumar, Karthi, P S Mithran, Sardar will find this news story useful.