Godavari News Banner USA

#23YearsOfYuvanism : யுவன் ஏன் இப்படி கொண்டாடப்படுகிறார்..? - தமிழ் சினிமாவின் இசை இளவரசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவன்ஷங்கர் ராஜா...! பெயரை சொல்லும் போதே உடலுக்குள் இசையின் உணர்வு ஏற்படுகிறதா..? அப்படியான உணர்வுகளை நமக்குள் அசால்ட்டாக கடத்தி செல்வதில் தான் யுவன் ஸ்பெஷலிஸ்டே. 1997-ல் ஆரம்பித்த யுவனின் இசைப்பயணம் இன்று 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 100-க்கும் மேற்பட்ட படங்கள், எக்கச்சக்க ஹிட் பாடல்கள் என தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் யுவனை, ரசிகர்கள் ஒரு ஹீரோவுக்கு இணையாக கொண்டாடுகின்றனர். ஒரு இசையமைப்பாளரை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள். அப்படி அவர் என்னதான் செய்தார்..? என்று நீங்கள் நினைத்தால், இதை வாசிப்பது கட்டாயமாகும்.!

யுவன்ஷங்கர் ராஜாவின் 23 வருட இசைப்பயணம் | Yuvan Shankar Raja's 23 years as music director

அப்பா இளையராஜா. தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை ரீ டெஃபனிஷன் செய்த இசை சிற்பி. தொட்டதெல்லாம் ஹிட் எனும் அளவுக்கு மிகப்பெரிய உச்சியை தொட்டுவிட்டார். அப்படிப்பட்ட குடும்பத்தில் அண்ணன் கார்த்திக் ராஜாவும் இசை அறிவோடு இருக்க, சுட்டிபையனாக சுற்றிதிரிந்தார் யுவன். அப்பாவின் ரத்தம் சும்மா இருக்குமா, விளையாட்டாக போட்ட சில ட்யூன்கள் தயாரிப்பாளர் சிவாவுக்கு பிடித்துபோக, யுவனின் அறிமுகம் அரவிந்தனில் உதயமானது. பதினாறு வயதில் கிரிக்கெட்டில் கால் பதித்த சச்சின் போல, இசையுலகில் நுழைந்தார் யுவன். அரவிந்தன் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாமல் போக, அடுத்தடுத்த இசையமைத்த வேலை, கல்யாண கலாட்டா உள்ளிட்ட படங்களாலும் யுவனுக்கு பெரிய கவனத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை. அப்போதுதான் கிடைத்தது வசந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார். படத்தின் கதையே இரண்டு இசையமைப்பாளர்களுக்குள் நடக்கும் ஈகோ பிரச்சனை என்கிற போது, படத்தின் இசை எப்படி இருக்க வேண்டும். 18 வயதில் லெஜன்ட்ரி இசையமைப்பாளர்களுக்கேற்ப இசையமைத்தார் யுவன். அதுமட்டுமின்றி, இரவா பகலா, ஓ சென்யரிட்டா, சுடிதார் அனிந்து வந்த சொர்கமே என சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்து அசத்தினார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகமான தீனா. அஜித் - யுவன் எனும் மாஸ் காம்போவுக்கு பிள்ளையார் சுழி இங்குதான் போடப்பட்டது. மாஸ் தீம் ம்யூசிக் ஒருபுறம், க்ளாஸ் பாடல்கள் ஒருபுறம் என தீனாவில் தன்னை யார் என திரும்பி பார்க்க வைத்தார் யுவன்.

இதற்கு பின்னர் வரும் காலக்கட்டத்தில் இளையராஜா, ரகுமானை தொடர்ந்து இளைஞர்களின் ஃபேவரைட்டாக யுவன் மாறும் நேரம் வந்தது. அதற்கான காரணம் அவர் இசையமைத்த அப்போதைய படங்கள். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக கொண்டாடப்படும் செல்வராகவன், அமீர், விஷ்ணுவர்தன் மூவரும் அறிமுகமான காலக்கட்டம் இது. செல்வராகவன் - யுவன் கூட்டணியில் முதல் படமான துள்ளுவதே இளமை 2001-ல் வெளியானது. பாடல்கள் எல்லாம் செம ஃப்ரெஷ். இது காதலா என ஏக்கத்தில் தொடங்கி, நெருப்பு கூத்தடிக்குது என கூத்தாட்டம் போடும் அளவுக்கு அத்தனை பாடல்களும் யுவனின் தரமான சம்பவம். ஒரே ஆல்பம் மூலம், ஒட்டுமொத்த இளசுகளின் இதயத்தையும் கொள்ளைக்கொண்டார் யுவன். இதற்கு பிறகு அமீரின் மௌனம் பேசியதேவில் அலப்பறை இல்லாத அழகான மெலடிகளால் மயக்கிய யுவன், விஷ்ணுவர்தனின் ஆல்பம் படத்தில் முதல் ரீமிக்ஸ் பாடலான ஆசை நூறுவகை பாடலை போட்டு, ட்ரென்ட் செட்டரானார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த யுவனை, சட்டென உச்சிக்கு கொண்டு சென்றது காதல் கொண்டேன். பாடல்கள் எல்லாம் தாறுமாறு ஹிட் என்றால், பின்னணி இசைக்கே தனி சிடி போடும் அளவுக்கு பிஜிஎம் வேற லெவல் ஹிட். இளையராஜாவின் பின்னணி இசை மேஜிக், யுவனுக்குள்ளும் வெளிப்பட ஆரம்பித்தது.

இளம் இசையமைப்பாளராக நன்கு அறியப்பட்ட யுவனுக்கு, தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியது இதற்கு பின்னர் வந்த படங்களும் பாடல்களும். அப்படியான படங்களில் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, 2004-ல் வெளியான 7ஜி ரெயின்போ காலனியும் மன்மதனும் தான். செல்வா-யுவன் கூட்டணியின் மேஜிக், இந்த முறை இன்னும் பெரியதாக செயலாற்றியது. அவர்களோடு சேர்ந்து நா.முத்துகுமார் செய்தது தனி வார்த்தை ஜாலம். நினைத்து நினைத்து பார்த்து பாடலுக்கு முன் வரும் அந்த சின்ன சாக்ஸஃபோன் இசை ஒன்று போதும், காதல் தோல்வி கண்டவர்களின் கண்ணீரை தானாக வர வைத்துவிடும். அந்தளவுக்கு 7ஜியில் யுவன் போட்ட இசை அத்தனை உணர்வுபூர்வமானது. அனிதா பரிட்சைக்கு படிக்கும் அந்த இரவில் இருந்து கல்லூரிக்கு செல்லும் காலை வரை, யுவன் கொடுத்த ஜிங்கல்ஸ், 20 காதல் படங்களுக்கான பக்கா தீம் மியூசிக் மெட்டீரியல்ஸ். 7ஜியில் கவிதையாய் இசையமைத்த யுவன், மன்மதனில் வெஸ்டர்ன் கலாட்டா செய்தார்.  இருந்தும், காதல் வளர்த்தேன் பாடலின் மூலம் தான் ஒரு மெலடி கிங் என்பதை அவர் நிருபிக்க தவறவில்லை. பின்ன, அவர் மெலடிகளின் மாஸ்டர் இளையராஜாவின் மகனாயிற்றே.!

2005 யுவனின் இசை பாதையில் முக்கியமாக கவனிக்கபட வேண்டிய வருடம். ராம், அறிந்தும் அறியாமலும், கண்டநாள் முதல், சண்டக்கோழி என ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதே வருடத்தில் தான் செல்வா-யுவனின் ஆல்டைம் ஃபேவரைட்டான புதுப்பேட்டையும் வெளியானது. இதன் கம்போசிங்காக யுவன் பறந்தது பேங்காக்கிற்கு. அதனால் தான் புதுப்பேட்டை படத்தின் ஒலி வேறு ரகத்தில் இருந்தது. இன்றளவும் ஒரு கல்ட் க்ளாசிக்காக புதுப்பேட்டை கொண்டாப்படுவதில் யுவனின் பங்கு பெரியது. தொடர்ந்து வல்லவன், திமிரு என ஹிட் மேல் ஹிட்டாக கொடுத்து வந்திருந்த யுவன், தன்னால் கிராமத்து படங்களுக்கு தரமான இசையை கொடுக்க முடியும் என நிருபித்தது பருத்திவீரனில். ஏலே..லேலே.. என தன் ஒற்றைக்குரலால் அனைவரையும் பருத்தியூருக்கே கடத்தி சென்றார் யுவன். இன்று வரை திருவிழாக்களில், ஊரோரம் புளியமரம் பாடல் இல்லாமல் இருக்காது எனும் அளவுக்கு யுவனின் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெஸ்டர்னோ ஃபோக்கோ, ராஜா கையை வைத்தால் அது ராங்கா போகாது என்பதை யுவன் தன் இசையால் சொல்லிவிட்டு சென்றார். தீபாவளியில் வரும் போகாதே பாடலை கேட்டு, தற்கொலைக்கு முயன்றவர் திருந்திய கதைகளும் யுவன் வரலாற்றில் உண்டு. இதை சொல்லியவர் யுவனின் ஆஸ்தான ரைட்டர் நா.முத்துகுமார். அதே போல யுவன் இசையில் இரண்டு முக்கியமான இயக்குநர்களாக கருதப்படுபவர்கள் வெங்கட் பிரபுவும் ராமும். இவர்கள் இருவருடனும் யுவன் முதல் படத்திலேயே அவுட் ஆஃப் த க்ரவுன்ட் சிக்சர் அடித்தார். நட்புக்குள்ளே ஒரு பிரிவின்று என நட்பின் பிரிவையும், பறவையே எங்கு இருக்கிறாய் என காதல் பிரிவையும் யுவன் சொல்லியவிதம் கல்மனம் கொண்டவரையும் கரைய வைக்கும் மாயமாகும். கற்றது தமிழில் வரும், பற பற பட்டாம்பூச்சி பாடல் ஒன்று போதும், ஆகப்பெரிய மனச்சோர்வை உடைத்து எரியும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் அது.

தனது அழகான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த யுவன், பில்லாவின் மூலம் அவர்களை தன் ஃபாலோயர்களாக்கினார். பில்லா தீம் மியூசிக் இல்லாத செல்ஃபோன் ரிங்டோன்கள் அப்போது அரிதிலும் அரிது. இதை தொடர்ந்து, ஏகன், சிலம்பாட்டம், சரோஜா, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், சர்வம், வாமணன், சிவா மனசுல சக்தி என யுவன் செய்தது, தொட்டதெல்லாம் தங்கம் ஆனது கதைதான். அன்றைய எஃப்.எம் ஸ்டேஷன்களுக்கு வெப்பன் சப்ளையராக வலம் வந்தார் யுவன். செல்வராகவன், அமீர், விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, ராம், லிங்குசாமி, சுசீந்திரன் என பல இயக்குநர்களின் மோஸ்ட் வான்டட் மியூசிக் டைரக்டர் என்றால் அது யுவன்ஷங்கர் ராஜா தான். அப்படி பல ஹிட் பாடல்கள் கொடுத்து ப்ளேலிஸ்டை நிரப்பினார் யுவன். அஜித்துடன் மங்காத்தாவில் மாஸ் காட்டிவிட்டு, ஆரண்யகாண்டத்தில் வேறு மாதிரி க்ளாஸ் காட்டுவதெல்லாம் யுவனுக்கு மட்டுமே உரிய ஸ்டைல். அதற்கு பிறகு வந்த சில படங்கள் பெரிய வெற்றி பெறாமல் போனது. யுவனின் இசை கவனிக்கப்பட்டாலும், பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக வெற்றிபெறாதது யுவனையும் பாதித்தது. மேலும் அவரின் தாயார் இழப்புக்கு பிறகு யுவன் சற்றே மன ரீதியாக தடுமாறித்தான் போனார். இதை அவரே கூட வெளிப்படையாக கூறினார். யாருக்கு தான் ஒரு தடை வராது. அப்படியான தடைக்கு பிறகு என்ன செய்கிறோம் என்பதுதானே இங்கே முக்கியம். அதை பக்காவாக செய்து, தடைகளை உடைத்தெரிந்த மந்திரக்காரன் தான் யுவன்ஷங்கர் ராஜா. தங்கமீன்கள் ஆனந்த யாழை, தர்மதுரை எந்த பக்கம் என இரண்டு பாடல்களுக்கும் பாடலாசியர்களுக்கு தேசிய விருது, இன்று வரை ரசிகர்களை ஏங்க வைத்து கொண்டிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை பட பாடல்கள், ராமின் தரமணியில் தரமாண இசை என யுவன், 'நான் எப்போதுமே ராஜாதான்டா' என்பதை உணர்த்தி கொண்டுதான் இருக்கிறார். உலக பாடகளுக்கே டஃப் கொடுக்கும் அளவில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக ரவுடி பேபியை கொடுத்தவரும் இதே யுவன்தான்.  2019-ல் பேரன்பு, என்.ஜி.கே, சூப்பர் டீலக்ஸ், நேர்கொண்ட பார்வை. இந்த நான்கு படங்களை பார்த்தால், ஒவ்வொன்றுக்கும் சம்பந்தமே இருக்காது. அப்படியான இந்த படங்களுக்கு யுவன் காட்டிய வெரைட்டி தான், அவரின் இத்தனை வருட சக்சஸ் ஃபார்முலா. இதோ அடுத்து அஜித்தின் வலிமையில் மீண்டும் ஒரு பேங் கொடுக்க ரெடியாகிவிட்டார் யுவன்.

ஒரு லெஜன்டின் மகனாக பிறந்து, பலவித கம்பாரிசன்களை தாண்டி, தனக்கான தனி அங்கீகாரத்தை எட்டிபிடித்திருக்கும் யுவனின் சாதனை, இந்த வார்த்தைகளை எல்லாம் தாண்டி வீரியமானவை.  தேவதையை கண்டேன் என 90-ஸ் தலைமுறையை கலங்க வைத்துவிட்டு, அன்பே பேரன்பே என 2k கிட்ஸையும் முணுமுணுக்க வைக்கும் பியானோவின் மாயம் அறிந்த யுவன், தமிழ் சினிமாவின் ஆல்டைம் இசை இளவரசன் தான்! அதனால்தான் யூத் ஐக்கானாக கொண்டாடப்படும் அளவுக்கு அவருக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டம். இன்று மட்டுமல்ல, இசை இருக்கும் காலம் வரை, யுவனும் யுவனின் பாடல்களும் கொண்டாடப்பட்டு கொண்டேதான் இருக்கும். அது தான் நிஜம்.

இந்த 23 ஆண்டு காலமாக நம் செவிகளுக்கு செம ட்ரீட் கொடுத்து கொண்டிருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

Entertainment sub editor