'நளினகாந்தி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் பொன் சுகிர், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பிடிபட்டதால் பொள்ளாச்சி சம்பவம் வெளியே வந்தது. இல்லாவிடில் இது தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருந்திருக்கும். நமது சமுதாயம் பெண்களை கற்பு பண்பாடு என்னும் பொல்லாச் சிறையிலிட்டு இப்படியான கொடூரங்களுக்கு மீண்டும் மீண்டும் பலியாக்கிய வண்ணமே இருக்கிறது.
இதை தடுக்க வேண்டுமென்றால் கற்பு எனும் விலங்கை பெண்களுக்கு போடக் கூடாது. ஒரு ஆண் தனது அந்தரங்கத்தை பதிவு பண்ணி மிரட்டினால் அதைப்பார்த்து பயப்படக்கூடாது, மாறாக அதை அவள் காவல்துறையிடம் சொல்லும் துணிவு வேண்டும். காவல் துறையும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அடுத்த படியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமுதாயம், அரசு சிறப்பு சலுகை மூலம் நல் வாழ்வு அமைக்க வழிவகுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் மட்டுமல்ல அதற்கு உறுதுணையாக இருப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தை ஒரு தனிப்பட்ட விஷயமாக எடுக்க கூடாது. ஆனாலும் ஆண் வர்க்கம் இந்த 4 பேருக்கு தண்டனை கொடுத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் சம்மந்தப்பட்ட காணொலிகளை எப்போ பார்க்கலாம் என துடித்திருக்கும்.
#MeToo இயக்கத்தை கண்டு பயந்து எத்தனையோ பேர், அதை பதிவு செய்த பெண்களை கெட்டவர்களாக முத்திரை குத்தினார்கள். தாங்கள் செய்ததை மறைக்க மற்றவன் செய்த குற்றத்தையே நியாயப்படுத்தினர்.
பெண்களை கற்பு பண்பாடு மானம் என்னும் சிறைகளிலிருந்து விடுதலை செய்யுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.