பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸ் உடையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்த நடிகை நிலானி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியானார். அதைத் தொடர்ந்து லலித்குமார் காந்தி என்பவரை காதலித்து வந்த நிலானி அவரை பிரிந்ததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இவ்விரு சர்ச்சைகளுக்கு பின் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை நிலானி தற்போது மீண்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு நடிகை நிலானி கடுமையான வார்த்தைகளால் தனது ஆதங்கத்தை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், திரைப்படங்களில் வருவது போல் நடந்துள்ளது இச்சம்பவம். அண்ணா அண்ணா என கதறும் அப்பெண்ணின் குரலை கேட்கும் போது தாங்க முடியவில்லை. மனிதாபிமானம் எங்கே போனது? எந்த ஒரு பின்புலமும் இல்லாத என் மீது பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர்கள் இப்போது ஏன் வழக்கு தொடர முன்வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆபாச வார்த்தைகளால் குற்றவாளிகளையும், சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது பழி சுமத்துபவர்களையும் திட்டித் தீர்த்த நிலானி, இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். உண்மையில் குற்றவாளிகளின் தாய் நல்ல தாயாக இருந்தால் அவர்களே தங்களது மகன்களை கொன்றுவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணீருடன் தனது ஆதங்கத்தை ஆவேசமாக பகிர்ந்த நிலானியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: கண்ணீருடன் விளாசிய நடிகை நிலானி வீடியோ